நீட் தேர்வுக்கு எதிராக பேசி மாணவர்களின் வாழ்க்கையை அழிப்பதற்கு அரசுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ உரிமை கிடையாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் அவசர சட்ட வரைவு, மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது விரைவில் நடைபெறும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இன்னும் இரண்டொரு நாட்களில் நீட் தேர்வு விவகாரம் குறித்து முடிவு வெளிவரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நீட் தேர்வுக்கு எதிராக பேசி மாணவர்களின் வாழ்க்கையோடு தமிழக அரசியல்வாதிகள் விளையாட வேண்டாம் என கூறியுள்ளார்.

இன்று 71-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நீட் தேர்வுக்கு எதிராக பேசி, தமிழக மாணவர்களின் வாழ்க்கையை அழிப்பதற்கு அரசுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ உரிமை கிடையாது என்று கூறினார்.