திரைத்துறை மற்றும் பல்வேறு தொழில்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான விஷயங்களை, மீ டூ என்ற, ஹேஸ்டேக் வாயிலாக, வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, இந்த விஷயம் குறித்து விசாரிக்க, மத்திய அரசு குழு அமைத்துள்ளது. தமிழ் திரையுலகிலும், மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 


அதேநேரத்தில், 'விளம்பரத்திற்காகவும், பணம் பறிக்கவும், மீ டூவை பயன்படுத்த வேண்டாம்' என, நடிகையர், காஜல்அகர்வால், சமந்தா உள்ளிட்ட பலர் கூறியுள்ளனர். இந்தி திரையுலகில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கொடுத்த செக்ஸ் புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று தமிழகத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய குற்றச்சாட்டு ட்ரெண்டங்கில் உள்ளது. தமிழகத்தில் ஊடகங்கள், வலைதளங்கள் என அனைத்திலும் வைரமுத்து-சின்மயி விஷயம் பேசப்பட்டு வருகிறது. சின்மயி தவிர வேறு சில பெண்களும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , யார் மீதும் யார் வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற நிலையை மீ டூ மூவ்மெண்ட் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆதாரம்  இலலாமல் போகிற போக்கில் குற்றச்சாட்டை சுமத்துவது என்பது தவறு என்றும், இது போன்ற பழியைச் சுமந்து கொண்டு இருப்பது மிகவும் கஷ்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பின் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்று தெரிந்தால் அவரது வாழ்க்கையே அர்த்தமற்றதாக போய் விடும் என குற்றம்சாட்டுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் பொன், ராதாகிருஷ்ணன் என குறிப்பிட்டுள்ளார்