துரோகிகளுடன் மாரடித்தேன்! துறை சார்ந்த சதி செய்தனர்! அரசு என் சுதந்திரத்தில் தலையிடுது பொளந்து கட்டும் போலீஸ் பொன் மாணிக்கவேல்

அதிரடியான சினிமா போலீஸ் அதிகாரிகளைப் பார்த்து, சில உண்மையான இளவட்ட போலீஸ் அதிகாரிகள் மிடுக்கும், முறுக்கும் காட்டுவதுண்டு. ஆனால், உண்மையான ஒரு கெத்து போலீஸ் அதிகாரியைப் பார்த்து சினிமாவே எடுக்கிறார்கள் என்றால் அவர் எம்மாம் பெரிய வேலைக்காரராக இருக்க வேண்டும்!? அந்த பெருமைக்கு சொந்தக்காரர் ‘பொன் மாணிக்கவேல்’.

தமிழக சட்டஒழுங்கு காவல்துறையில் ஐ.ஜி.யாக இருந்தவர் இவர். சில காலத்துக்கு முன் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். செம்ம ஆக்‌ஷன் அதிகாரியான இவர் அந்தப் பணியில் இறங்கிய பின் மளமளவென சில அதிரடி ரெய்டுகள், கைதுகள், கொத்துக் கொத்தாக சிலை மீட்புகள் நடந்தன. இதனால் பொதுமக்கள் இவரைப் பாராட்டித் தள்ளினர். 

ஆனால் அதே வேளையில், இவருக்கு எதிராகவும் ஒரு லாபி வெடித்தது. இவரது டீமில் பணியாற்றிய சில போலீஸாரே இவருக்கு எதிராக வெளிப்படையாக புகார் பேட்டி அளித்தனர். இந்த நிலையிலும் பல வித தாக்குதல்களை தாக்குப்பிடித்து, தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். 

இந்த நிலையில் இவரது பதவிக்காலமானது கடந்த நவம்பர் 30 உடன் முடிந்ததாக தமிழக அரசு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ‘பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. அவ்வாறு செய்வது கோர்ட் உத்தரவை மீறிய செயல்!’ என பதில் கடிதம் அனுப்பி, அதிரடி காட்டியுள்ளார் மனிதர். 

தமிழக போலீஸ் வட்டாரத்தினுள் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் கிளப்பியிருக்கையில், ஒரு நாளிதழுக்கு அளித்திருக்கும் ஸ்பெஷல் பேட்டியில் பொன் மாணிக்கவேல் சில விபரங்களை ஹாட்டாக கொட்டியுள்ளார். அதில்...

“எனக்கும், தமிழக அரசுக்கும் இடையில் மோதல் ஒன்றுமில்லை. நான் என்னுடைய டூட்டியை செய்கிறேன். கோர்ட் என்னை நியமித்தபோது பிறப்பித்த உத்தரவுகளை தவறாது கடைப்பிடிக்கிறேன். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. எனக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. அவர், வழக்கின் போக்கு குறித்த விபரங்களைக் கேட்கிறார். மீட்டிங் வருமாறு அழைக்கிறார், அடுத்தது யார், யாரை கைது செய்யப்போகிறீர்கள்? என கேட்கிறார். 
இப்படியெல்லாம் ஒரு அதிகார அமைப்பின் கீழ்தான் பணியாற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் எனக்கு விதிக்கப்பட்டிருந்தால், சிறப்பு அதிகாரி பொறுப்பை ஏற்றிருக்க மாட்டேன். என் சுதந்திரமான விசாரணையில் அரசு ஏன் தலையிடுகிறது? அந்த அதிகாரி ஏன் மூக்கை நுழைக்கிறார்? 

சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டேன். ஆனால் என்னை வழக்கு வேலையையே பார்க்கவிடாமல் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாக்கினர். எனக்கு கீழே பணியாற்றிய அதிகாரிகளையே எனக்கு எதிராக தூண்டிவிட்டு பேட்டி ளிக்கச் செய்து, துறை சார்ந்த சதி செய்தனர். துரோகிகளுடன் மாரடித்து போராட வேண்டியிருந்தது.” என்று ஆவேசப்பட்டிருக்கிறார். 

நல்ல ஆபீஸர்களை நல்லபடியா செயல்பட விடவே மாட்டாய்ங்க! சினிமாவிலும் இப்படித்தான், சீரியஸாவும் இப்படித்தான். 

-    விஷ்ணுப்ரியா