காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீர்ப்பங்கை கர்நாடகா முறையாக திறந்துவிடாத நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில், தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரை காவிரியிலிருந்து கர்நாடகா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. ஆனால், அந்த நீரையே முழுமையாக கர்நாடகா தராத நிலையில், அதை எதிர்த்து தமிழகம், கர்நாடகா அரசுகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதை விசாரித்த உச்சநீதிமன்றம் அண்மையில் இறுதித்தீர்ப்பு வழங்கியது. அதில், நடுவர் மன்றம் தமிழகத்திற்கு ஒதுக்கிய நீரிலிருந்து 14.75 டிஎம்சியை குறைத்து 177.25 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக பார்க்கப்பட்டாலும், அந்த நீரையாவது முறையாக வழங்க வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் நீண்டகால கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதுதொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்திவருகிறது.

இந்த சூழலில் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காவிரியில் பெங்களூரு மாநகரின் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்தக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடந்தது.

அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கழிவுநீர் கலக்கப்பட்ட காவிரி நீரே தமிழகத்திற்கு கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உரிய நீர்ப்பங்கை கர்நாடகா திறந்துவிடாததே பெரும் பிரச்னையாக உள்ள நிலையில், திறந்துவிடப்படுவதும் கழிவுநீர் கலந்த நீர் என்ற தகவல் தமிழக விவசாயிகளையும் மக்களையும் ஆத்திரமடைய செய்துள்ளது.