திருப்பூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்பு நாற்காலிக்காக அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணனும், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் நாகரீகம் இல்லாமல் மோதிக் கொண்ட காட்சி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

விழா தொடங்குவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியின் அருகே உட்காருவதற்கு உடுமலை ராதா கிருஷ்ணனுக்கும் , சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

முதலமைச்சரின் அருகே அமருவதற்காக ஒரு நாற்காலியை இருவரும் பிடித்து இழுத்து சண்டை போட்டனர்.

மேலும் அவர்கள் தகாத வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்தனர். இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் மேடை ஓரத்தில் போடப்பட்டிருந்த  நாற்காலியில் அமர்ந்தார்.

இந்த சண்டையை பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி செய்வதறியாமல் திகைத்து நின்றார்.

பொதுமக்கள் முன்னிலையில் ஒரு நாற்காலிக்காக இவர்கள் இருவரும் அடித்துக் கொண்டது தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என அவர்கள் நொந்து போய் பேசிக்கொண்டனர்.