பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வீடியோ விவகாரம் குறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இடம் மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பொள்ளாச்சி வீடியோ அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி கும்பலுடன் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களுக்கும் தொடர்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொள்ளாச்சி ஜெயராமன் உடனடியாக டிஜிபி டிகே ராஜேந்திரனை சந்தித்து சமூகவலைதளங்களில் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் அவதூறு பரப்பப்படுவதாகவும் அதன் பின்னணியில் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இருப்பதாகவும் பரபரப்பு புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு சென்றனர். துவக்கத்தில் பொள்ளாச்சி வீடியோ வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் தான் பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் பிறகுதான் மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்த பொள்ளாச்சி ஜெயராமன் சந்தித்திருப்பதாக தெளிவுபடுத்தப்பட்டது. 

சென்னையில் உள்ள பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் வைத்து சுமார் 3 மணி நேரம் மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் பொள்ளாச்சி ஜெயராமனிடம் விசாரணை நடத்தினர். அப்போது எந்த அடிப்படையில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது புகார் கொடுத்து உள்ளீர்கள், உங்கள் குடும்பத்திற்கும் எதிராக அவதூறு பரப்பப்பட்டு விவகாரத்தில் சபரீசன் பின்னணியில் உள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்று போலீசார் பொள்ளாச்சி ஜெயராமன் இடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

அப்போது பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியதுடன் தனது குடும்பத்தின் பெயரையும் உள்ளே இழுத்து விட்டது சபரீசன் மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் தான் என்பதை விளக்கும் வகையில் சில ஆவணங்களையும் சில புகைப்படங்களையும் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்துள்ள ஆவணங்களில் சில முக்கியமானவையாக உள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் தகவல்களை கசியவிட்டு வருகின்றனர். பொள்ளாச்சி வீடியோ விவகாரத்தில் அதிமுகவின் பெயர் மட்டுமே டேமேஜ் ஆகியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் திமுக வின் பெயரையும் உள்ளே இழுத்து விட பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் சபரீசனிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.