அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கபப்ட்ட நடிகர் ரஜினிகாந்த், ‘தன்னால் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை. எனவே என்னை மன்னியுங்கள்’ என்று அறிக்கை வெளியிட்டார். ரஜினியின் முடிவை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றபோதும், அவருடைய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். இந்நிலையில் ரஜினிகாந்தின் நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன்பாபு இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ரஜினிகாந்த் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இறங்கவில்லை என்று தற்போது அறிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தாலும், அவருடைய உடல்நிலையை முழுமையாக அறிந்த ஒரு நண்பர் என்ற முறையில் அது நல்லது என்று நம்புகிறேன். 
ரஜினி மிகவும் நல்லவர். எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காதவர். ரஜினி மற்றும் என்னை போன்றவர்களுக்கு அரசியல் பயனற்றது,  நாங்கள் இருப்பதைப் அப்படியே பேசுகிறோம். யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று கூட தெரியாது. அரசியல் என்பது ஒரு மயக்கம். அது ஒரு சேறு. அந்த சேற்றில் நீங்கள் ஒட்டாமல் இருப்பது நல்லது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்த்தைப் போலவே நல்லவர்கள். நீங்கள் அனைவரும் எனது நண்பரின் முடிவை தயவுடன் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.” என்று அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.