பற்றி எரியும் ஒரு பிரச்சினையை மறைக்க, மற்றொரு பிரச்சினையை கிளப்பி விட்டு மக்களை திசை திருப்புவது, மன்னராட்சி காலம் தொடங்கி மக்களாட்சி காலம் வரையிலும் கடை பிடிக்கப்படும் ராஜ தந்திரம்.

ஈழத்தமிழர்கள் படுகொலையை மறைக்க, கருணாநிதி உண்ணா விரதம் இருந்தது முதல் பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

மதுவிலக்கு போராளி சசி பெருமாள் மரணத்தை திசை திருப்ப, பீப் பாடல் சர்ச்சையை கிளப்பி சிம்பு-அனிருத்தை பலிகடா ஆக்கியதும் அப்படிப்பட்ட ஒரு ராஜ தந்திரம் தான்.

எம்.ஜி.ஆர் மறைந்தபோது, ஜானகி அவரை விஷம் வைத்துக் கொன்றார் என்ற குற்றச்சாட்டை அப்போது முன் வைத்தார் ஜெயலலிதா.

தற்போது ஜெயலலிதாவை சசிகலா கும்பல் கொன்றுவிட்டது போன்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறது பன்னீர் தரப்பு.

கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, அந்த அணி கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் ஜெயலலிதா மரண விவகாரம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கோரிய கருணாநிதியை "நாகரீகமற்றவர்" என்று விமர்சித்தவர்கள் இவர்களும்தான்.

விவசாயிகள் தற்கொலை, டெல்லியில் விவசாயிகள் போராட்டம், இலங்கை ராணுவத்தால் மீனவர் சுட்டு கொலை என பல்வேறு பிரச்சினைகள் தமிழத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அதை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், சத்தம் போடாமல் வாட் வரியை உயர்த்தி, தமிழகத்தின் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழி வகுத்தவர் முதல்வர் எடப்பாடி.

இரண்டு வாரமாக டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை கண்டு கொள்ளாத முதல்வர், ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றிக்காக பணப்பட்டுவாடா செய்வது எப்படி? என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். 

ஒருபக்கம், இறந்தாலும் ஊழல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவை, தலையில் தூக்கி கொண்டு அவரது மரணத்தில் அனுதாபம் தேட ஆளாய் பறக்கிறது பன்னீர் அணி.

மறுபக்கம், சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து, நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழுந்து, ஆட்சிக்கும், கட்சிக்கும் வழிகாட்ட ஆலோசனை கேட்கிறது அவரது ஆதரவாளர் கூட்டம்.

இவர்களில் யாருக்குமே தமிழத்தின் மீதும், தமிழ் மக்கள் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறையே இல்லை என்பதற்கான உதாரணங்கள்தான் இத்தகைய நிகழ்வுகள்.

இதற்கு மத்திய அரசும் துணை நிற்கிறது, சிலருக்கு மறைமுகமாக ஆதரவும் அளிக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை.

மொத்தத்தில், எம்.ஜி.ஆர் எப்படி இறந்தார்? ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்று கேள்வி எழுப்புவதை நிறுத்தினால்தான், தமிழகம் சுயமரியாதையுடன் தலை நிமிர்ந்து நிற்கும்.

அந்தப் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு துளி கூட இல்லை. எல்லாம் மக்கள் கைகளில்தான் இருக்கிறது. மக்கள் அதை செய்வார்களா?