*    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கல்வித்துறைக்கென தனி சேனல் ஏற்படுத்தப்படும்: செங்கோட்டையன். 
(க்கும் இதுவரைக்கும் உடைச்சதெல்லாம் பத்தாதா? பள்ளிகள் தோறும் உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், ஆய்வகம்னு  சொன்னதெல்லாம் என்னாச்சு...காத்தோடு போச்சு. இப்ப சேனலாம்!)

*    நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம்: பிரகாஷ் ஜவடேகர்.
(அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் எடப்பாடியார் அட்டென்ஷன் ப்ளீஸ்! ஜவடேகர் இதை சொல்றப்ப நீங்க அசந்து தூங்கிட்டு இருந்தீங்க, எழுந்திருச்ச  பிறகும் அதை  கண்டுக்கலைன்னு கேள்வி. கேக்குதா? கேக்குதா?)

*    பெரும்பான்மை ஊடகங்கள் எதிர்கட்சிகளின் கையில்தான் இருக்கின்றன. அவர்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் சர்வே முடிவுகள் வருவதாக கூறுவார்கள். இதில் ஆச்சரியமென்ன?: எம்.எல்.ஏ. ஆர். நட்ராஜ் (மாஜி டி.ஜி.பி)
(நீங்கதான் சார் சொல்றீங்க ஊடகங்கள் எதிர்கட்சிகள் கையில இருக்குதுன்னு. முதல்வர் பெயரை ‘எடப்பாடி பழனிசாமி’ன்னு எழுதுனா, சொன்னால் கெளரவ குறைச்சலாகவும், மரியாதை குறைவாகவும் இருக்குதுன்னு சொல்லி ‘இ.பி.எஸ்.’ன்னு கெத்தாக குறிப்பிட சொல்லி மேலிட ஆர்டர், அது நிறைவேற்றவும் பட்டிருக்குது. இப்பவுமா நாங்க நம்பணும், ஊடகங்கள் எதிர்கட்சிகள் கையிலிருக்குதுன்னு!?)

*    முருகனின் பெயரை தாங்கியவர்கள் தான் நான்கு இடைத்தேர்தல் தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு வாக்குகள் கேட்டு துரைமுருகனாகிய நான் வந்திருக்கிறேன். வேறென்ன வேண்டும்: துரைமுருகன். 
(எல்லாம் ஒரே முருக மயமா இருக்குதே! திருச்செந்தூர், திருத்தணி மாதிரி முடிவு கலகலன்னு இருந்துட்டா பரவாயில்லை. ஆனா பழனி மாதிரி கோவணத்தாண்டியா ஒண்ணுமில்லாம, மொட்ட மொழுக்குன்னு போயிட கூடாதேன்னுதான் தளபதி கலங்குறாரு.)

*    அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் புதுவையின் துணைநிலை கவர்னரை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்: ஸ்டாலின். 
(அட போங்கண்ணே, சொந்த வூட்டுக்குள்ளேயே ஆயிரத்தெட்டு ஓட்ட உடைசல். இதுல பக்கத்துவீட்டுல பெயிண்டு உறிஞ்சதை பத்தி வருத்தப்படுறீங்க? எடப்பாடி அரசுக்கு எதிரா நீங்க கொடுத்த புகார்களை தமிழக கவர்னர் எந்த டப்பாவுல போட்டு வெச்சிருக்கார்னு தெரியுமா?)