அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கோரி டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். இந்த விண்ணப்பம் மீது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்றே முடிவெடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுக துணைப் பொதுசெயலாளராக இருந்த டி.டி.வி.தினகரனை அக்கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அதிரடியாக நீக்கம் செய்தனர். இதையடுத்து அமமுக கட்சியை ஆரம்பித்து பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகித்து வந்தனர். இடையே அதிமுகவை மீட்டே தீருவோம்  வழக்குத் தொடர்ந்தனர்.  ஆகையால் எப்படியும் அதிமுக தங்கள் வசம் வந்துவிடும் என எதிர்பார்த்த அவர்கள் அமமுகவை கட்சியாக பதிவு செய்யவில்லை. 

இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைத்தார். பலம் வாய்ந்த திமுகவை டெபாசிட் இழக்க செய்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட அதே குக்கர் சின்னத்தை டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் கோரினார். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை ஒதுக்கமுடியாது என கூறியது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதிவு செய்யாத கட்சிக்கு சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

அப்போது பதிவு செய்யப்படாத கட்சியாக இருப்பதால் அமமுக கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள். ஆகையால் அவர்களுக்கு தனித்தனி சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது. ஆனாலும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்ததால் அமமுகவுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் குறுகியுள்ள தீர்ப்பில் தற்காலிகமாக மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டும் பரிசுப்பெட்டி சின்னத்தை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. ஆனால் வருகிற 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலைக்கு டிடிவி.தினகரன் தள்ளப்பட்டிருந்தார்.

இதனிடையே சமீபத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள அமமுகவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கோரி டிடிவி தினகரன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது தேர்தல் ஆணையம் இன்றே முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.