வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தமிழகத்தில் திமுக, தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக, தலைமையில் ஒரு கூட்டணியும் அமைய உள்ளன. திமுக, கூட்டணியில் காங்கிரஸ்,  அதிமுக, கூட்டணியில் பிஜேபி, இணைவது மட்டும் உறுதியாகி உள்ளது.மேலும் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அணியில் இணைய முடிவு செய்துஉள்ளன. பாமக, - தேமுதிக, - புதிய தமிழகம் போன்ற கட்சிகள் அதிமுகவில் இணைய பேச்சு நடத்தியுள்ளன. திமுக, கூட்டணியில் சேர பாமக, தரப்பில் முதலில் பேச்சு நடந்தது. திமுக, சார்பில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த முன்னால் மத்திய அமைச்சர் ஒருவர் முன்னின்று பேசினார். பாமக, சார்பில் ஆறு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் செலவையும் திமுகவே ஏற்க வேண்டும் என சொன்னதாக தெரிகிறது. இதை திமுக, தலைமை ஏற்கவில்லை என்பதால் இழுபறி நீடிக்கிறது.

அதைத் தொடர்ந்து பாமக தன் பார்வையை அதிமுக, பக்கம் திருப்பியுள்ளது. இங்கும் புதுவை உள்ளிட்ட ஆறு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. ஓட்டுக்கு துட்டு விவகாரத்தை ஓரளவுக்கு ஏற்ற போதிலும் புதுவை தொகுதியை ரங்கசாமியின் NR, காங்கிரஸ் கேட்பதால் இழுபறி ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மட்டும் 4 தொகுதிகள் தர அதிமுக, முன்வந்துள்ளது. இதை ஏற்க மறுத்த பாமக, தற்போது 'புதுச்சேரியை ஒதுக்காவிட்டால் ஏழு தொகுதிகள் வேண்டும்' என 'டிமாண்ட்' வைத்துள்ளதாக தெரிகிறது. 

தேமுதிக, தலைமை நேரடியாக அதிமுகவுடன் பேசாமல் பிஜேபி வழியாக பேச்சு நடத்தியது. இக்கட்சிக்கான தேர்தல் செலவை பிஜேபி ஏற்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதாக தெரிகிறது.மேலும் அதிமுக, அணியில் தேமுதிக, சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்டன. மூன்று தொகுதிகளை வழங்க அதிமுக, முன்வந்துள்ளது. சேலம் தொகுதியை முதலில் தேமுதிக, கேட்டுள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் அந்த தொகுதியை தர அதிமுக, மறுத்து விட்டது.

தற்போது சேலம், கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு தேமுதிக, அடம் பிடிக்கிறது. இத்தொகுதியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஷ் போட்டியிட வாய்ப்புள்ளது. ஆனால் இத்தொகுதியையும் விட்டு தர அதிமுக விரும்பவில்லை. காரணம் அதிமுக, சார்பில் இத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி போட்டியிட விரும்புகிறார். அதுமட்டுமல்ல கரூர் தொகுதியில் கைகழுவி தன் சொந்த மாவட்டமான இத்தொகுதியில் போட்டியிட லோக்சபா தம்பிதுரையும் விரும்புகிறாராம். சேலம் தொகுதியை எடப்பாடி பழனிச்சாமியே தனது சொந்தக்காரரை நிற்கவைக்க உள்ளதால், கொடுக்க தயங்குகிறாராம். இந்த இரண்டு தொகுதிக்கு பதிலாக கள்ளக்குறிச்சியை கை மாற்ற முடிவியில் உள்ளதாம்.

ஆனால் 'கிருஷ்ணகிரி தொகுதி கிடைத்தால் மட்டுமே கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும்' என சுதீஷ் கறாராக கூறிஉள்ளார். இதனால்அதிமுக, கூட்டணியில் தேமுதிக, இடம்பெறுவது தாமதமாகி வருகிறது. இக்கூட்டணியில் இணைய புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவையும் விருப்பம் தெரிவித்துள்ளன. இவற்றுக்கு யார் ஒதுக்கீட்டில் 'சீட்' வழங்குவது, அவர்களுடைய தேர்தல் செலவை யார் ஏற்றுக் கொள்வது என்பதில் முடிவு ஏற்படாமல் உள்ளது. திமுக, கூட்டணியில் காங்கிரஸ் இணைவது உறுதியாகி விட்டாலும் 'சீட்' ஒதுக்கீட்டில் சிக்கல்நீடிக்கிறது. அக்கட்சி இரட்டை இலக்கத்தில் 'சீட்' கேட்க திமுக, தலைமையோ ஒற்றை இலக்கத்தில் நிற்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக, அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இக்கட்சி இரு தொகுதிகளை கேட்டு திமுக, தலைமையிடம் பட்டியல் தந்துள்ளது. ஆனால் 'திருமாவளவனுக்கு மட்டுமே தொகுதி' என அறிவாலய வட்டாரம் கூறியுள்ளது. இதனால் இந்த கட்சியுடனான பேச்சும் இழுபறியில் தான் இருக்கிறது.

மதிமுக, தரப்பும் திமுக,வையே மலை போல் நம்பியிருக்கிறது. சமீப காலமாக தி.மு.க.,வின் ஊதுகுழலாகவே மாறி விட்ட மதிமுக, தலைமை மூன்று தொகுதிகளை கேட்டு காத்திருக்கிறது. எத்தனை தொகுதிகள் என்பதை திமுக, மேலிடம் இன்னமும் உறுதி செய்யாததால் அறிவாலயத்திற்கு வெளியே நிற்கிறது.

திமுக,வின் காத்திருப்போர் பட்டியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன. அவற்றுக்கான தொகுதிகளை முடிவு செய்துள்ள திமுக, தலைமை கடைசி நேரத்தில் தான் அழைப்பு அனுப்பும் என தெரிகிறது. இரு கூட்டணியிலும் பேச்சு நடத்தி வரும் கட்சிகளில் சில 'நாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் 'சீட்' தருவதோடு தேர்தல் செலவுக்கு பெரும் தொகையும் தர வேண்டும்; அல்லது மாற்று அணி தயாராக இருக்கிறது' என பேரம் பேசுகின்றன. தங்கள் கோரிக்கை ஏற்கப்படா விட்டால் மாற்று அணிக்கு சென்று விடுவதாகவும் இக்கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.

இதன் காரணமாக அதிமுக, - திமுக, இரு தலைமையும் கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றன. இவ்விரு கட்சிகளிடம் பேரம் படியாமல் ஒதுங்கும் கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் கட்சியான அமமுக, ரெடியாக கட்டு கட்டா துட்டு வைத்துக்கொண்டு ரெடியாக காத்திருக்கிறது.