என் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று தான் நினைக்கவில்லை என்று தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலேயே வயது குறைந்த ஆளுநராக தமிழிசையே இருக்கப்போகிறார். இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை தீவிர அரசியலில் இருக்க அவருக்கு வயது இருந்தபோதும், ஓய்வுக் கால பதவியாகக் கருதப்படும் ஆளுநர் பதவியை தமிழிசைக்கு வழங்கியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் அவருடைய அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழிசை ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார். “ நான் அப்படிப் பார்க்கவில்லை. ஆளுநர் பதவி என்பது  பெரிய வாய்ப்பு. ஓர் அரசியல்வாதியாக, மக்களின் பிரதிநிதியாகவே வர வேண்டும் என்றே விரும்புகிறேன். இப்போது ஆளுநராகி இருப்பதன் மூலம் மக்களிடம் எனது கருத்துகளை பேசுவேன். என்னுடைய அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. அது இன்னும் சென்றுகொண்டேதான் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.


இதேபோல தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறினீர்கள். இப்போது தெலங்கானாவில் தாமரை மலருமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “தமிழகத்தில் நிச்சயமாகத் தாமரை மலர்ந்தே தீரும். தெலங்கானாவில் ஏற்கனவே பாஜக வளரத் தொடங்கி விட்டது. நான் இப்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் அரசியல் பேசக் கூடாது. நான் இந்தப் பதவியை வைத்து தெலங்கானா மக்களுக்கு சிறப்பாகப் பணியாற்ற முடியும். நான் எந்த உயர்ந்த பதவியை எட்டினாலும் என்னுடைய எளிமையையும் அணுகுமுறையையும் மாற்றிக் கொள்ள மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.