சமீபத்தில் தான் கனிமொழிக்கு நெருக்கமாக இருந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் டம்மியான போஸ்டிங்கிற்கு தூக்கி அடிக்கப்பட்ட நிலையில் தற்போது கனிமொழி வீட்டிற்கான பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திமுக எம்பியும் அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி சென்னை சிஐடி காலனியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கலைஞர் காலம் தொட்டே இது தான் கனிமொழியின் வீடு. இந்த வீட்டிற்கு எப்போதும் ஒரு எஸ்ஐ தலைமையில் ஷிப்ட் அடிப்படையில் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர். இந்த நிலையில் நேற்று காலை திடீரென போலீஸ்காரர்கள் யாரும் கனிமொழி வீட்டிற்கு பாதுகாப்பிற்கு வரவில்லை. வாசலில் யாரும் பாதுகாப்பிற்கு இல்லை என்கிற தகவல் வந்த உடன் தனியார் செக்யூரிட்டி ஆட்களை அவசர அவசரமாக கனிமொழி வர வழைத்தார்.

முதல் நாள் தான் சாத்தான்குளம் போலீசாருக்கு எதிராக டிஜிபியை நேரில் சந்தித்து கனிமொழி புகார் அளித்துவிட்டு திரும்பியிருந்தார். அடுத்த நாளே கனிமொழி வீட்டுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இது திடீரென தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் உடனடியாக மீண்டும் கனிமொழி வீட்டிற்கு பாதுகாப்பிற்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பிரச்சனை முடிந்தது. ஆனால் கனிமொழி வீட்டிற்கு பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்றதன் மூலம் அரசு அவரை குறி வைப்பது தெரியவந்துள்ளது. திமுக ஆட்சியில் உளவுத்துறையில் கோலோச்சிய அதிகாரி ஒருவர் கனிமொழிக்கு மிகவும் நெருக்கம்.

இருவரும் தொலைபேசியில் பேசிய உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அதிகாரி டம்மி பதவிக்கு மாற்றப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கடந்த ஆண்டு அந்த அதிகாரி மீண்டும் அதிகார மையத்திற்கு வருகை தந்தார். மிகவும் பவர்புல்லான பதவியில் இருந்த அவரை அண்மையில் தான் மீண்டும் டம்மி பதவிக்கு தூக்கி அடித்தது எடப்பாடி அரசு. இதன் பின்னணியில் திமுக எம்பி ஒருவர் தனது கல்லூரிக்காக ஆக்கிரமித்த இடம் தொடர்பான வழக்கில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அந்த காவல்துறை உயர் அதிகாரி மீது புகார் எழுந்தது.

மேலும் அந்த திமுக எம்பி, கனிமொழிக்கு மிகவும் நெருக்கமானவர் என்கிறார்கள். கனிமொழியின் வரவு செலவு பாதி, அந்த எம்பியின் மூலம் வருவது தான் என்று கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் காவல்துறை அதிகாரி வேறு பதவிக்கு மாற்றப்பட்ட நிலையில் தான் அவருக்கு நெருக்கமாக இருந்த கனிமொழியின் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் கனிமொழி, நிலஅபகரிப்பு புகாருக்கு ஆளான எம்பி மற்றும் அந்த காவல்துறை உயர் அதிகாரி என 3 பேரையும் மையமாக வைத்து ஏதோ அரசு ஸ்கெச்ட் போடுகிறது என்கிற பேச்சும் அடிபடுகிறது.

இதற்கிடையே அந்த நில அபகரிப்பு புழகருக்கு ஆளான எம்பியின் தொடர்புகள் மூலம் கனிமொழியை ஏதேனும் சிக்கலில் சிக்க வைக்க முடியுமா? என்று கூட போலீசில் ஒரு டீம் ஆலோசனையில் இருப்பதாகவும் அதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. திமுகவில் உயர் பதவியில் இருக்கும் கனிமொழியின் இமேஜை டேமேஜ் செய்வதன் மூலம் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று கூட இந்த பணியில் அரசு ஆர்வம் காட்டலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வழக்கமாகவே திமுக நிர்வாகிகளை குறி வைத்து அடிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் கனிமொழியும் குறி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதனை நேற்று காலை திடீரென காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஒரு விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் வீடு என்கிற அடிப்படையில் சிஐடி காலனியில் கனிமொழியின் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வந்ததாகவும் தற்போது கனிமொழிக்கு எந்த மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் இல்லை என்பதால் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாகவும் விஸ்வநாதன் கூறினார். ஆனால் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் கனிமொழி வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து வீட்டு பணியாளரை தாக்கிய சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.