வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது , சிலை உடைத்தவர்களை உடனே கைது செய்து சிறையில் அடைக்க  வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது, இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், “வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் தான்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “ஒடுக்கப்பட்ட சமூகமும், முன்னேற வேண்டிய சமூகமும் மோதிக்கொள்வது அரசியலை தொழிலாய் செய்பவர்களுக்கு தீனியே தவிர, தமிழின முன்னேற்றத்திற்கு வழியல்ல. சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீது அரசின் நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும்” என்றும் தன் அறிக்கையின் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.