கிருஷ்ணகிரி

காவல்துறையினரின் மாதச் சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் போச்சம்பள்ளியில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் நெப்போலியன் தலைமை வகித்தார். 

மாவட்டத் தலைவர் அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலர் திருப்பதி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் சரவணன் நன்றித் தெரிவித்தார். 

இந்தக் கூட்டத்தில் மாநில நிறுவன தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று பேசியது: "உச்ச நீதிமன்றம் ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டும், அதை மத்திய அரசு இதுவரை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வகுத்ததுபோல, காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் அமைத்தால் மட்டுமே நமக்கு தண்ணீர் கிடைக்கும். இதற்கு தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த அரசில் உள்ள முதல்வர், துணை முதல்வர் செய்ய மாட்டார்கள். 

கடந்த சில மாதங்களாக காவல் துறையினர் தற்கொலை செய்து வருவதும், தீக்குளிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம் உயரதிகாரிகளின் வற்புறுத்தல் மற்றும் அவர்களின் மீது திணிக்கப்படும் வேலைப் பளுதான். 

அவர்களுக்குண்டான மாதச் சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்த வேண்டும். பணி நேரத்தை எட்டு மணி நேரமாக வரையறை செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு தங்குமிடம் ஓய்வு அறை, கழிப்பறை, பெண் காவலர்களுக்கான உடை மாற்றும் அறை, இரவு நேர ரோந்து செல்லும் பெண் காவல் துறையினருக்கு குறிப்பிட்ட இடங்களில் ஓய்வு மற்றும் கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது ஒரு இலட்சத்து முப்பதாயிரம் காவலர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு இருபதாயிரம் வீடுகள் கூட கிடையாது. மேலும், அவர்களுக்கு உண்டான படிகள் முறையாக தரப்படுவதில்லை. இதனால் மன உளைச்சலில் உள்ள காவலர்களுக்கு உளவியல் ரீதியான, மனித உரிமை குறித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் காவலர்களின் தற்கொலை தடுக்கப்படும்"  என்று அவர் தெரிவித்தார்.