கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. சாதாரண கொலை கொள்ளை வழக்காக இருந்த இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவில் கவனிக்கப்படும் வழக்காகியுள்ளது. இதற்கு காரணம் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயன் மற்றும் வளையார் மனோஜ் கொடுத்த பேட்டிகள் தான்.

கொடநாட்டில் கொள்ளை அடிக்கச் சென்றதே எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் என்று சயன் கொளுத்திப் போட தற்போது தமிழக அரசியல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தால் எடப்பாடிக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட தமிழக போலீசார் களம் இறக்கப்பட்டனர். ஒரே நாள் இரவில் டெல்லியில் முகாமிட்ட போலீசார் அங்கு ஒரு ஓட்டலில் இருந்த சயன் மற்றும் மனோஜை கொத்தாக அள்ளிக் கொண்டு வந்தது.

விசாரணைக்கு வாருங்கள் என்று கூறியதும் டிப் டாப்பாக டிரசை போட்டுக் கொண்டு எவ்வித தயக்கமும் இன்றி இருவரும் எங்கு வர வேண்டும் வாருங்கள் என்று போலீசாரை கூட்டிக் கொண்டு நடந்துள்ளனர். விசாரணை என்றதும் சிறிதும் பயப்படாமல் இருவரும் வந்த காரணத்தினால் போலீசார் இந்த விவகாரத்தை அப்போது முதலே கவனமாக எதிர்கொள்ள முடிவெடுத்துவிட்டனர்.

டெல்லியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் அங்கு போலீசார் கைது எல்லாம் செய்யவில்லை. வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று கூறியே சென்னை அழைத்து வந்துள்ளனர். நேராக விமான நிலையத்தில் இருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு இருவரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு வைத்து எஸ்.பி. செந்தில் குமார் தான் இருவரையும் விசாரித்துள்ளார்.

கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் சிறிதும் தயக்கம் இல்லாமல் இருவரும் பதில் அளித்துள்ளனர். தங்களை யாரும் தூண்டவில்லை. இந்த வழக்கு சம்பந்தமாக செய்தி சேகரிக்க உள்ளதாக மாத்யூஸ் கூறினார். எனது உயிருக்கு எப்போதும் ஆபத்து இருந்து கொண்டே இருந்தது. எனவே எனக்கு எதுவும் நேர்வதற்குள் இந்த வழக்கின் பின்னணியை வெளிப்படுத்த விரும்பினேன். அதனால் மாத்யூஸ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன் என்று கூறியுள்ளார் சயன்.

இதே போல் வளையார் மனோஜூம் கூட போலீஸ் கேட்ட கேள்விகள் எதற்கும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் பதில் அளித்துள்ளார். தான் சிறையில் இருக்கும் போதே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்நத்தாகவும் மேலும் தான் கேரளாவை சேர்ந்தவன் என்பதால் துணிச்சலாக எடப்பாடி குறித்த உண்மையை வெளியிட்டதாகவும் மனோஜ் தெரிவித்துள்ளார். 

இருவரும் மிகவும் தெம்பாக பேசியதால் இந்த விவகாரத்தில் என்ன செய்வது என்று போலீசாருக்கு தெரியவில்லை. மேலும் இருவருமே ஹை புரஃபைல் நபர்களாக தற்போது மாறிவிட்டதால் போலீஸ் ட்ரீட்மென்டும் கொடுக்க இயலவில்லை. இதனால் சுமார் 11 மணி நேரமாக திரும்ப திரும்ப கேட்டும் கடைசி வரை தங்களை யாரும் தூண்டவில்லை, தாங்களாகவே தான் கூறினோம் என்று மட்டும் இருவரும் கூறியுள்ளனர்.

சயன் மற்றும் மனோஜை போலீசார் தனித்தனியாக வைத்தே விசாரித்துள்ளனர். அப்போதும் கூட இருவரும் ஒரே மாதிரியான பதிலையே கொடுத்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் மாலைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். முதலமைச்சர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளோம் என்கிற அச்சம் அவர்கள் இருவருக்கும் துளியும் இல்லை என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

எனவே அவர்கள் பின்னணியில் தற்போது அதிகாரம் மற்றும் பணபலம் மிக்க நபர்கள் இருப்பது உறுதி என்கிற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். அது குறித்து அறிய சயன் மற்றும் மனோஜூடன் தொடர்பில் இருந்த நபர்களை அறிய அவர்கள் இருவரும் பயன்படுத்திய செல்போன் எண் விவரங்களை தற்போது போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.