கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ராமசாமி 21 நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டுள்ளார். அவரது கொரோனா அனுபவம் குறித்து வீடியோ ஒன்றை அமைச்சர் விஜயபாஸ்கர் பகிர்ந்துகொண்டுள்ளார். 

அதில், ராமசாமி நான் கடந்த 7ம் தேதி கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலைமையில் சென்னையில் உள்ள அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு நல்ல முறையாக சிகிச்சை அளித்ததால் வீடு திரும்ப உள்ளேன். இதுக்கு நான் முதலில் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நான் கடந்த 21 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தேன். தீவிர சிகிச்சை இருந்த போது நல்ல முறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இன்று நான் உயிரோட வீடு திரும்புகிறேன் என்றால் அதுக்கு காரணம் இந்த மருத்துவமனையில் டீன் மருத்துவர் ஜெயந்தி மற்றும் அவருடன் பணிபுரிந்த மருத்துவர்கள் ராஜேந்திரன், ராகவேந்திரா, பவானி மற்றும் அவர்களுடன் பணியாற்றி செவிலியர்கள் சிறப்பாக கவனித்து கொண்டனர்.

ஒவ்வொரு மருத்துவர்களும், செவிலியர்களும் அவர்கள் வீட்டில் யாருக்காவது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி சிகிச்சை அளிப்பார்களோ அதே மாதிரி தான் எனக்கு சிகிச்சை அளித்தார்கள். இதனால் அவர்களுக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 21 நாட்களாக பார்க்கும் போது எனக்கு மட்டும் அவங்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இங்கு வரும் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். ஒவ்வொருவரையும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை வந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பார்த்துக் கொள்கின்றனர். இங்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கின்றனர். 

மேலும், இங்கு 3 வேலையும் நல்ல சாப்பாடு கொடுக்கின்றனர். சத்தான உணவுகள், கபசுர குடிநீர், இஞ்சு தண்ணீர், பால், முட்டை, காசாயம் உள்ளிட்டவற்றை எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கொடுக்கின்றனர். இந்த கொரோனா நோயால் நான் மட்டும் பாதிக்கப்படவில்லை, என்னால் என்னுடைய மனைவி, மகளும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் ராமசாமி கூறியுள்ளார்.

 

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மகத்தான சேவையில் வீடு திரும்பியுள்ள இன்ஸ்பெக்டர் ராமசாமியின் இந்த நெகிழ்ச்சியான வீடியோவை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். உயிர் கொல்லி வைரஸான கொரோனாவை கண்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள இந்த சமயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ நம்பிக்கையும், புத்துணர்வையும் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.