முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து வரி உயர்வு- அதிமுக போராட்டம்
தமிழகத்தில் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினர், திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து கண்டன உரையை நிகழ்த்திய எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு தான் வீட்டு வரியை உயர்த்த சொல்லி உள்ளது என்கிறார், ஆனால் அப்படி எங்கும் மத்திய அரசு குறிப்பிடவில்லை. மத்திய அரசின் மீது வீன் பழியை போட்டு ஏமாற்ற பார்க்கின்றனர் என தெரிவித்தார். இந்தியாவிலேயே தேர்தல் அறிக்கையை புத்தகம் போட்டு வெளியிட்ட கட்சி திமுக தான், அதிலும் குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் 487வது அறிவிப்பில் சொத்து வரி உயர்த்தப்படாது என்று சொல்லிவிட்டு தற்போது ஏன் உயர்த்தபட்டது என கேள்வி எழுப்பினார். இதே போல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்பட்டம் நடத்தினர்..

ஈபிஎஸ் மீது வழக்கு பதிவு
இந்தநிலையில் புதுக்கோட்டையில் சொத்துவரி உயர்வை கண்டித்து நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல திருச்சி ஜங்சன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராசன்,வளர்மதி, பரஞ்ஜோதி உள்ளிட்டவர்கள் மீது 4 பிரிவின் கீழ் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளனர். இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட அனுமதி மறுக்கும் திமுக ?
சொத்து வரி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலையில் மக்களுக்காக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினால் வழக்கு பதிவு செய்யப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அதிமுகவினர், ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த கூட திமுக அரசு அனுமதிக்கவில்லையென்று குற்றம்சாட்டினர்.
