ஆர்.கே.நகரில் இன்றும் நாளையும் கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் கரண்சின்ஹா தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர ஆணையர் கரண்சின்ஹா ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது கரண்சின்ஹா உரையாற்றுகையில், " ஆர்.கே.நகரில் எங்கெங்கு சிசிடிவி அமைக்க வேண்டும் என்பது விரைவில் முடிவு செய்யப்படும். மத்திய பாதுகாப்பு படையினருடன் இணைந்து 1,694 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள்.ஆர்.கே.நகரில் இதுவரை 7 லட்சம் ரூபாய் ரொக்கம், குத்து விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன." 

"இதுவரை பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. வாய்த்தகராறே நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க வகை செய்யும் பொருட்டு இன்றும் நாளையும் கொடி அணிவகுப்பு நடத்தப்படும்" இவ்வாறு கரண் சின்ஹா தெரிவித்தார்.