பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்ததையடுத்து ரிசார்ட்டில் இருந்து 300 க்கும் மேற்பட்ட காவலர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

எனவே அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுனரை சந்திக்க நேரம் கோரியிருந்தார். இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் 12 பேரை ராஜபவனில் சந்தித்து பேசினார்.

அப்போது ஆட்சியமைக்க அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிமை கோரியதாக தெரிகிறது.

மேலும் அதிமுக அதரவு எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கினார்.

5 நிமிடம் மட்டுமே நடைபெற்ற இந்த சந்திப்பில் வேறு எதுவும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

இந்த சந்திப்பு முடிவடைந்ததையடுத்து எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து ரிசார்ட்டில் குவிக்கபட்டிருந்த காவலர்கள் 300 பேர் திடீரென வெளியேற்றப்பட்டனர்.

மேலும் தற்போது ஆளுநரை சந்தித்து டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன், மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவது பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தையும் எதிர்பாரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.