அதிமுக கட்சி கொடியில் உள்ள அண்ணா படத்தை நீக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் பேசியதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்தார். ‘எஸ்.வி.சேகர் ஒரு பொருட்டே அல்ல. வழக்கு போட்டால் ஓடி ஒளிந்து கொள்வார்’ என்று கிண்டல் செய்திருந்தார் முதல்வர். இதற்கு பதில் அளித்த எஸ்.வி.சேகர், ‘தாங்கள் பால் பாக்கெட்டு போட்ட இடத்தில்தான் நான் இருக்கிறேன். எங்கும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை’ என்று முதல்வரை கிண்டலாக விமர்சித்திருந்தார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவித்த விவகாரத்தில் எம்.ஜி.ஆர். களங்கப்படுத்தப்பட்டதாக அதிமுக விமர்சிப்பது குறித்து வீடியோவில் பேசிய எஸ்.வி.சேகர், ‘காவியை களங்கம் என சொல்லும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியை ஆகஸ்டு 15 அன்று ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா’ என்றும் பேசியிருந்தார். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் இணையவழி வாயிலாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். 
அதில், ‘தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் எஸ்.வி.சேகர் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.