ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது தடையை மீறி கூட்டம் நடத்திய முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான பொன்முடி உள்ளிட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக அரசின் முறைகேடுகளை மாவட்ட வாரியாக பட்டியலிட வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவித்தார்.

இதனையடுத்து, விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான பொன்முடி தலைமையில் திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.  144 தடை உத்தரவை மீறி கூட்டம் நடத்தியதாக விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பிரபு கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவின் கீழ் பொன்முடி எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏற்கனவே, தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக பேசியது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி,ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அதேபோல, ஆர்.எஸ்.பாரதி கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் ரவிச்சந்திரன், ராஜா ரங்கநாதன் உள்பட 96 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், தொற்றுநோய் பரப்புதல், தெரிந்தே பிறருக்கு தொற்று நோய் ஏற்படுத்தும் செயல் செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.