கறுப்பர் கூட்டம் சுரேந்தர் உரிய இ- பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கருப்பர் கூட்டம்' என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு தமிழக முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக உட்பட பல்வேறு தரப்புகளின் சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் அதிடிரயாக கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்தர் என்பவர் புதுச்சேரியில் ஜூலை 17-ம் தேதி சரணடைந்தார்.  மேலும், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்திற்கும் போலீசார் சீல் வைத்தனர். 

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் செல்வி அளித்த புகாரின் பேரில் சுரேந்தர் மீது 5 பிரிவுகளில் புதுச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதில், இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்கு வந்தது, அரியாங்குப்பம் பகுதியில் அனுமதியின்றி கூட்டம் கூட்டியது, முகக்கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியின்றி இருந்தது, கொரோனா தொற்றுடைய காலத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியது உள்ளிட்டவை தொடர்பாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.