உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தியை போலீசார் தள்ளி விட்டு தாக்குதல் நடத்தி கீழே விழ வைத்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம், ஹத்ராஸ் நகரில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காரில் சென்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்காவை டில்லி, உ பி, தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அங்கிருந்து தடையை மீறி கிராமத்தை நோக்கி நடந்து சென்ற ராகுலை போலீசார் கைது செய்தனர்.

கடந்த செப்டம்பர், 14ம் தேதி, இங்குள்ள ஹத்ராஸ் பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை, நான்கு பேர் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். படுகாயங்களுடன் டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தால், டில்லி மற்றும் ஹத்ராஸ் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன. இதற்கிடையே, இரவோடு இரவாக அந்த பெண்ணின் உடல், ஹத்ராசுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன், போராட்டத்திலும் ஈடுபட்டன.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறப்போவதாக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கூறியிருந்தனர். இதனை தொடர்ந்து, ஹத்ராஸ் நகரில், கொரோனா பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள மாவட்ட நிர்வாகம், அதிகம் பேர் கூட தடை விதித்துள்ளது. அந்த கிராமத்தில் மீடியாவிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராகுல், பிரியங்கா ஆகியோர் கார் மூலம் ஹத்ராஸ் நகரை நோக்கி புறப்பட்டனர். ஆனால், கிரேட்டர் நொய்டா வந்தபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அங்கிருந்து 142 கி.மீ., தொலைவில் உள்ள ஹத்ராஸ் நகரை நோக்கி ராகுலும், பிரியங்காவும் நடந்து செல்ல முயன்றனர்.  அப்போது அவர்கள் பின்னால் வந்த காங்கிரஸ் தொண்டர்கள், முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது ராகுல்காந்தியை போலீசார் தள்ளி விட்ட காட்சிகளும்,  ராகுல் காந்தி கீழே விழுந்த காட்சிகளும் செய்திகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. 

இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், ’’போலீசார் என்னை கீழே தள்ளினர். லத்தியால் அடித்ததுடன், கீழே தள்ளிவிட்டனர். நாட்டில் மோடி மட்டும் தான் நடக்க வேண்டுமா? என கேட்க விரும்புகிறேன்? சாதாரண மனிதன் நடக்கக்கூடாதா? எங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், நாங்கள் நடந்து செல்கிறோம்’’’என ஆவேசப்பட்டார். இதனை தொடர்ந்து தடையை மீறி நடந்து சென்ற ராகுலை போலீசார் கைது செய்தனர்.