மதுரையில் இன்று மு.க.அழகிரி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். 

திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் கட்சி தலைமை இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. 

இந்நிலையில், அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மதுரையில் ஜனவரி 3ல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என மு.க.அழகிரி அறிவித்தார். இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 15,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை மதுரைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதன்படி, மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஆதரவாளர்கள் மதுரை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு புதிய கட்சி தொடங்குவதா, மீண்டும் திமுகவில் இணைவதா அல்லது ஏதெனும் ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து மு.க.அழகிரி, ஆதரவாளர்களுடன் ஆலோசிக்க உள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் தமது பங்கு நிச்சயமாக இருக்கும் என ஏற்கனவே அவர் தெரிவித்து இருந்ததால், இன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே,  இந்த ஆலோசனை கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிப்பாரா என்ற ஐயம் நிலவி வந்தது. இந்நிலையில், 500 பேர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு அனுமதி அளிக்க அழகிரி தரப்பு கோரிய நிலையில் மதுரை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.