Asianet News TamilAsianet News Tamil

போயஸ் கார்டனில் முறைகேடாக போலீஸ் பாதுகாப்பு - "உடனடியாக வாபஸ் வாங்கவேண்டும்" - ஒபிஎஸ்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

poes garden-security
Author
First Published Dec 24, 2016, 11:07 AM IST


அரசு பதவியில் யாரும் இல்லாத நிலையில் போயஸ் கார்டனுக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு, உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஓபிஎஸ்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து முகநூலில் அவரது அறிக்கை:

 மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தில் தமிழக காவல்துறை சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவின் முக்கியமான அணியைச் சேர்ந்த நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஏறத்தாழ 240 பேர் இன்னமும் பணியில் உள்ளதாக செய்தியை அறிகிறேன். 

இவர்களில் ஒரு சூப்பிரண்டெண்டண்ட் (கண்காணிப்பாளர்), 4 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 4 துணை கண்காணிப்பாளர்கள், 7 ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) உள்ளனர். மற்றவர்கள் துணை ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்), தலைமைக் காவலர்கள், கான்ஸ்டபிள்கள் ஆகியோராவர்.

இவர்களில் பலர் மூன்று ஷிஃப்டுகளில் போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியை இன்னமும் மேற்கொண்டிருப்பதுடன், முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரில் உள்ள வீட்டில் நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடையாறு போட் கிளப் ஏரியாவில் சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவு உள்ள மருதம் வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் மெஸ்ஸிலிருந்து இவர்களுக்கு உணவு கொண்டு செல்லப்பட்டு, ஒவ்வொரு வேளையும் வழங்கப்படுகிறது.

இந்தப் பணிக்கான ரிஸ்க் அலவன்சாக அவர்களின் ஊதியத்துடன் கூடுதலாக ரூ.6000 பெறுகின்றனர். அத்துடன், அவர்களின் விருப்பத் தேர்வின் அடிப்படையில் சென்னை மாநகரத்தின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் காவலருக்கான குடியிருப்பு ஒதுக்கப்படுகிறது. பாதுகாப்பு பணி சார்ந்த எந்த அலுவலாக இருந்தாலும் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கிறது. 

மரணமடைந்தவரின் பெயரில் பாதுகாப்பு பணி என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு கிடைக்கும் இந்த வசதி, சட்டம்-ஒழுங்கு காக்கும் பணியிலும், போக்குவரத்தை ஒழுங்கும் படுத்தும் பணியிலும் தினந்தோறும் கடுமையாகப் பணியாற்றும் காவல்துறையின் மற்ற பிரிவுகளைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்களுக்குக் கூடக் கிடைப்பதில்லை.

இவர்கள் மட்டுமின்றி, சென்னை மாநகரக் காவலைச் சேர்ந்த அதிகாரிகள்-காவலர்கள் என கூடுதலாக 60 பேரும் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் இல்லத்திற்கு பாதுகாப்பு பணி என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும், தாங்கள் இரட்டைப் பணி பார்க்க வேண்டியிருப்பதாகப் புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன. 

அதாவது, முதலமைச்சர் திரு ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் இல்லத்தில் பாதுகாப்பு பணியையும் அதன்பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பாதுகாப்பு பணியையும் தொடர வேண்டியிருக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.

தற்போது போயஸ் கார்டன் இல்லத்தில், அரசியல் சட்ட ரீதியிலான அதிகாரம் படைத்த எவரும் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த யாரும் இல்லாத நிலையில், அங்கே இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான காவலர்களும் உயரதிகாரிகளும் பாதுகாப்பு என்ற பெயரில் பணியில் நியமிக்கப்பட்டிருப்பது, தற்போது அந்த இல்லத்தில் உள்ள தனிப்பட்ட நபர்களுக்கு அரசாங்கத்தின் காவலர்களை தனியார் செக்யூரிட்டிகள் போல பயன்படுத்தும் இழிவான செயலாகும்.

 சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய பாதுகாப்பு பணியின் காரணமாக, மக்களின் வரிப்பணம் அநாவசியமாக செலவழிக்கப்படுவதுடன், திறமையான காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் திறமையும் உழைப்பும் வீணடிக்கப்படுகின்றன.

பெருமைமிகு தமிழக காவல்துறையை சீரழிக்கும் இத்தகைய அதிகார மீறல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறையின் தலைவரை வலியுறுத்துகிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகள் பெருகியிருப்பதுடன் கொலைகளும் கொள்ளைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன. 

இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையில் போதுமான பலம் இல்லை. 19ஆயிரத்து 157 பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய சூழலில், திறமைமிகு அதிகாரிகளையும் காவலர்களையும் தேவையற்ற பணிகளில் ஈடுபடுத்தி வீணடிக்காமல், உரிய பணிகளுக்கு அனுப்ப வேண்டும் என காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரான தமிழக முதல்வர் திரு ஒ.பன்னீர்செல்வம் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

 உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்க்கட்சியான தி.மு.கழகம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்க விரும்புகிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios