சிறையில் இருந்து வெளியான பிறகு சசிகலா ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்குள் செல்வதை தவிர்க்கவே அது அரசுடைமை ஆக்கப்பட்டது. இதே போல் தற்போது பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டுள்ளது சசிகலா அங்கு செல்வதை தவிர்க்கவே என்கிறார்கள்.

சசிகலா சிறையில் இருந்த நான்கு வருடங்களில் ஆட்சியை முழுமையாக தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவையும் முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அதிமுகவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மட்டுமே எடப்பாடியை ஆதரிக்கின்றனர். முன்னாள் நிர்வாகிகள், புதிதாக பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அந்த பதவியை எப்படி அடைவது என்கிற கணக்கில் தீவிரமாக உள்ளனர். இதே போல் நிர்வாகிகளாக உள்ள சிலர் எம்எல்ஏ பதவிக்கும், எம்எல்ஏவாக உள்ள சிலர் அமைச்சர் பதவி மீதும் கண் வைத்துள்ளனர்.

இவர்களை சமாளிப்பது தான் எடப்பாடிக்கு மிகப்பெரிய தலைவலி என்கிறார்கள். தற்போது கூட சசிகலாவிற்காக போஸ்டர் ஒட்டும் அதிமுகவினர் பெரும்பாலும் பதவியை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போனவர்கள் தான் என்கிறார்கள். அதிமுகவில் இருந்தபடியே சசிகலாவிடம் விசுவாசத்தை காட்டினால் அவர் மறுபடியும் அதிமுகவை கைப்பற்றும் போது தாங்கள் பதவிக்கு வர முடியும் என்று அவர்கள் கணக்கு- போடுகிறார்கள். அதே சமயம் சசிகலா தரப்பில் இருந்தே நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டு போஸ்டர் அடிக்குமாறு வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தலைவலி ஒருபுறம் இருந்தாலும் சசிகலாவை அதிமுக தொண்டர்கள் மத்தியில் ரீச் ஆகாமல் தடுக்க எடப்பாடி பழனிசாமி சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாகவே ஜெயலலிதாவின் வீடு நினைவிடமாக மாற்றப்பட்டது. அதாவது ஜெயலலிதாவுடன் சசிகலா இதே வீட்டில் தான் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்தார். ஜெயலலிதா – சசிகலா இணைந்து இந்த வீட்டில் இருந்து தான் அதிமுகவை வழிநடத்தினர். எனவே சிறை தண்டனை முடிந்து ஜெயலலிதா வீட்டிற்குள் சசிகலா காலடி எடுத்து வைத்தால் அது அவருக்கு அரசியல் ரீதியாக சாதகமாக அமையும் என்பதால் தான் அதனை முறியடிக்கும் வகையில் வீடு அரசுடைமை ஆக்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூருவில் தற்போது கொரோனா குவாரண்டைனில் இருக்கும் சசிகலா, சென்னை திரும்பி ஜெயலலிதா நினைவிடம நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டிருந்தார். அத்தோடு சிறைக்கு சென்ற போது ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் சபதம் எடுத்த நிலையில் அது ஊடகங்களில் பெருமளவில் பேசு பொருள் ஆனது. இதே போல் சிறையில் இருந்து திரும்பியதும் ஜெயலலிதா நினைவிடம் சென்று அவர் சபதம் எடுக்க கூடும் என்கிறார்கள். எனவே தான் அவர் ஜெயலலிதா நினைவிடம் செல்வதை தடுக்கும் விதமாக தற்போது அது பூட்டப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் பூட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் உண்மையில் ஜெயலலிதா நினைவிடம் பூட்டப்பட்டது சசிகலாவை அதற்குள் அனுமதிக்காமல் தடுப்பதற்குத்தான் என்கிறார்கள். இப்படி சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி தொடர்ச்சியாக காய் நகர்த்தி வரும் நிலையில், சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா? ஜெயலலிதா நினைவிடத்தை பூட்டிவிட்டால் சசிகலாவால் அதிமுகவை கைப்பற்ற  முடியாதா? என்று கூறிச்சிரிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.