தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும். பாமக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் இவை சாத்தியமாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதிய சுக்கா... மிளகா... சமூகநீதி நூல் வெளியீட்டு விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், “சமூகநீதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் எப்படியெல்லாம் ஏமாந்திருக்கிறோம்.... எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை இந்த புத்தகத்தை படித்த பிறகு நீங்கள் புரிந்து கொள்வீர்கள். சுக்கா...மிளகா... சமூகநீதி என்ற இந்த நூல் பைபிள், குரான், கீதை போன்ற நூல்களின் வரிசையில் போற்றப்பட வேண்டியது என்றும், வன்னியர்கள் அனைவரின் வீடுகளிலும் இந்த நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர் நெடுங்கீரன் போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த நூல் சமூகநீதிக்கான கட்டற்ற கலைக்களஞ்சியமாக, அதாவது என்சைக்ளோபீடியாவாக திகழும்.

பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வியில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக பெரும் தடையாக இருப்பது கிரீமிலேயர் முறை ஆகும். அது மிகப்பெரிய அநீதி, அக்கிரமம். கிரீமிலேயர் முறை முழுமையாக நீக்கப்பட வேண்டும். கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியமும் சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்ட போது, அதற்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தது நான்தான்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காக டெல்லியில் பல்வேறு போராட்டங்களையும் பாமக நடத்தியிருக்கிறது. மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை எட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் மிகவும் ஆமைவேகத்தில் நடைபெற்று வருகின்றன. சமநிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். நமது நாட்டில் சமநிலையற்ற வளர்ச்சிதான் உள்ளது. சமூகநீதி இல்லாத வளர்ச்சிதான் நடைமுறையில் உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.


தமிழ்நாட்டில் மக்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும். கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். தமிழக மக்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக வாழ வேண்டும். அதற்காக பாமக தமிழக மக்கள் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பான பல திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றை தொகுதி அளவிலும், கிராம அளவிலும், வீடுவீடாகவும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலம் மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.
