பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் பசுமை வழிச் சாலைக்காக மரங்கள் வெட்டப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மரம் வெட்டுவதைப் பற்றி இவர்கள் பேசலாமா என்று தமிழிசை எதிர்க் கேள்வி எழுப்பினார். இதற்கு எதிராகக் கொந்தளித்த பாமகவினர் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது. மேலும் தமிழிசை அன்புமணி இடையே டிவிட்டரில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டது.

108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த ராமதாஸின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் அதற்காக ராமதாஸிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்ட நிலையில், அரசியலில் யார் அறிவாளி என்று அன்புமணியுடன் நேரடி விவாதத்திற்குத் தயார் என்று தமிழிசை சவால் விடுத்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் ஜி.கே.மணி, "சமூகநீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறியதன் மூலம் தமிழகத்திலுள்ள இரண்டரை கோடி பாட்டாளி மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார். இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டம் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசியலில் கிழக்கும் தெரியாது; மேற்கும் தெரியாது. மாறாக மற்ற கட்சிகளின் தலைவர்களை நாகரிகம் இல்லாமல் விமர்சித்துப் பேசுவதன் மூலம் மிகக்கேவலமான முறையில் அரசியல் நடத்துவதற்கு மட்டுமே தெரியும். தமிழக அரசியலில் மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு மோசமான தலைவராகியிருப்பவர் தமிழிசை மட்டுமே" என்றும் விமர்சித்துள்ளார்.

"தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாய மக்களின் சமூகநீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திவிட்டு, அதற்காக மன்னிப்புக் கேட்காத தமிழிசை தமது செயலை நியாயப்படுத்தி வருகிறார். மானமுள்ள தீரத்திற்கு பெயர்போன மக்கள் இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.