பா.ம.க.வுக்கு  தமிழ்ல பிடிக்காத வார்த்தை ‘சினிமா’தான். தமிழனை முட்டாளாக்குவதுடன், அவனை சீரழித்து, இந்த மாநிலத்தின் வளர்ச்சியை தடைசெய்வது சினிமாதான்! என்று பல முறை பா.ம.க. நிர்வாகிகள் மேடைகளில் முழங்கியிருக்கிறார்கள். 

ஆனால் அக்கட்சியின் இந்த கொள்கைக்கு வந்தது அந்தோ சோதனை. மிகபெரிய அளவில் அரசியல் சரிவை சந்தித்து, கீழே விழுந்து கிடக்கும் பா.ம.க. எப்படியாவது அரசியலில் எழுச்சி பெற துடிக்கிறது. நாடாளுமன்றம், உள்ளாட்சி, சட்டமன்றம் என்று தமிழகத்தை அரசியல் மழை அடுத்தடுத்து முகாமிட இருக்கும் நிலையில் தன்னை தயார் செய்து, தெம்பேற்றிக் கொள்ள பல கோணங்களில் முனைகிறது. 

அதில் ஒன்றாக தன்னை ஜனரஞ்சக கட்சியாக காட்டிக்கொள்ள முயல்கிறது. அதற்காக ‘இவ்விடம் சினிமா நட்சத்திரங்கள் இணைக்கப்படும்’ என்று போர்டு மாட்டாத குறையாக நடிகர்களுக்கு வலைவீசி இழுக்க துவங்கியுள்ளது அக்கட்சி என்கிறார்கள் விமர்சகர்கள். 

அந்த வகையில் சில கட்சிகளில் உறுப்பினர் கார்டு வாங்கிவிட்டு சமீபத்தில் பா.ம.க.வில் இணைந்த நடிகர் ரஞ்சித்துக்கு மாநில துணைத்தலைவர் பதவியை வழங்கி, அக்கட்சி நிர்வாகிகளையே தெறிக்கவிட்டது தலைமை. ரஞ்சித்தால் டபுள் டிஜிட் வாக்குகளையாவது வாங்கித் தர முடியுமா? இவரையெல்லாம் நம்பி எப்படி கட்சியில இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கிறார் மருத்துவர் ஐயா? என்று அக்கட்சி நிர்வாகிகள் புலம்பிக் கொட்டிக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த வெடியை கொளுத்திப் போட்டுள்ளது தலைமை. 

அதாவது காமெடி கம் ஹீரோ நடிகர் சந்தானத்தை பா.ம.க.வுக்குள் இழுக்க முழு முயற்சியில் இருக்கிறதாம் பா.ம.க. சமுதாய ரீதியில் அந்த கட்சியின் தலைமையுடன் சந்தானத்துக்கு ஏற்கனவே நெருக்கம் உண்டு. அன்புமணி ராமதாஸின் மகள் திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகளில் கலந்து கொண்டு சந்தானம் கலகலத்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். 

சந்தானம் சில சினிமா பிரச்னையில் சிக்கியபோது அவருக்கு கை கொடுத்தது பா.ம.க.தான். இந்நிலையில் அதையும் சுட்டிக்காட்டி சந்தானத்தை தங்கள் கட்சியில் இணைய சொல்லி அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்களாம். 

ஏற்கனவே ஹீரோ வேஷம் போணியாகத காரணத்தினால் கடும் மனகஷ்டத்தில் இருக்கும் சந்தானம் ஒரு நேரத்தில் பேசாம அரசியலிலாவது குதித்து ஜெயிப்போம்! என நினைக்கிறாராம். ஆனால் அவருக்கு நெருக்கமான சிலரோ ‘அதுக்கு நீ ஏன் இந்த கட்சியை செலக்ட் பண்ற?’ என்று ஆப்படிக்கிறார்களாம். ஆக மொத்தத்தில் சந்தானத்தின் பதிலுக்காக பா.ம.க. வெயிட்டிங்!
காடுவெட்டியார் கலக்கிய கட்சிக்கு வந்த சோதனையை பாருங்கய்யா!