7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரை நிர்பந்திக்க முடியாது. உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் தர ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதுதான் அதிமுக அரசின் நோக்கம். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வாங்கியே தீரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுகவின் போராட்டத்தினால்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என பெயரை உருவாக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆளுநர் கடிதம் எழுதியதில் எந்த தவறும் இல்லை. குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்படாது. எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் பிரச்சனைக்காக மொத்த தேர்வையும் ரத்து செய்ய முடியாது. ஆகையால், இளைஞர்கள் கவலைப்பட தேவையில்லை. டிஎன்பிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பேசிய அமைச்சர் கூட்டணி கட்சி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே. அவரவர் கட்சியை வளர்க்க அவரவர் சில கருத்துகளை சொல்லத்தான் செய்வார்கள். வன்னியர் சமூகத்துக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் அதிமுக அரசு செய்து வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் குறித்து ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.