பாமக இரண்டாம் கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. எனவே அரசியல் கட்சிகளின் கூட்டணி இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட உடனே, நேற்று மாலை முதல் கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக அறிவித்தது. இதனையடுத்து இரவு 11.30 மணியளவில் பாமக 9 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அதன்படி, மயிலாடுதுறையில் சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, விருத்தாசலத்தில் ஜே.கார்த்திகேயன், சேப்பாக்கத்தில் ஏ.வி.ஏ கஸ்ஸாலி, நெய்வேலியில் கோ.ஜெகன், கும்மிடிப்பூண்டியில் எம்.பிரகாஷ், சோளிங்கரில் அ.ம.கிருஷ்ணன், கீழ்வேளூரில் (தனி) வேத முகுந்தன், காஞ்சிபுரத்தில் பெ.மகேஷ்குமார், மைலத்தில் சி.சிவகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாமகவுக்கு இதுவரை 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளன. எஞ்சிய 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என்று பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
