ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது என பாம நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

 

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி முன்பகை காரணமாக அதிமுக முன்னாள் கவுசிலரின் ஏவலால் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இதைச் செய்த மிருகங்கள் உயிர் வாழவே தகுதியில்லாதவர்கள். அரசியல்வாதி என்றால் மக்கள் தொண்டு செய்வோர் என்ற எண்ணத்தை மாற்றி; ரவுடிகள், மணல் மாபியாக்கள், சாராய அதிபர்களின் கூடாரமான திராவிட கட்சிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதிமுக- திமுக இரண்டும் ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்’’என கடுமையாக சாடியுள்ளார்