காடுவெட்டி குரு இருந்தபோதும் அதிரடிகளின் மையப்புள்ளியாக இருந்தார், இறந்த பின்னும் பரபரப்புகளின் மையப்புள்ளியாகவே இருக்கிறார். அதிலும் இவரது இறப்பை மையப்படுத்தி இப்போது எழுந்திருக்கும் புகார்கள் ஒவ்வொன்றும் டாக்டர் ராமதாஸை பெரிய அளவில் சர்ச்சைக்கு ஆளாக்கியும், காயப்படுத்தியும் வருகிறது. 

காடுவெட்டி குருவின் இறப்பிற்கு மிக முக்கிய காரணமே ராமதாஸ், அன்புமணி இருவரின் அலட்சியமும், அக்கறையற்ற தன்மையும்தான்! என்று அவரது ரத்த சொந்தங்கள் கொதிப்பாய் கூறிவருவதை நமது இணையதளம் தொடர்ந்து பதிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்திம் டாப் கியருக்கு மாறியிருக்கிறது. அதாவது, காடுவெட்டி குருவின் நெருங்கிய உறவினரான வி.ஜி.கே.மணி என்பவரை பா.ம.க.விலிருந்து சமீபத்தில் கட்டங்கட்டி நீக்கினார்கள் டாக்டர்கள் இருவரும். அதற்கு காரணம், அவர்கள் இருவர் பற்றியும் இவர் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக எழுந்த குற்றச்சாட்டினால்தான்.

 

வெளியே வந்த வி.ஜி.கே.மணி, கம்முன்னு இருப்பாரா? அதுவும், காடுவெட்டி குரு இவருக்கு சின்னமாமனார் முறையானவர். அந்த வீரமும், தீரமும், அதிரடி குணமும் இவரிடம் இல்லாமல் போகுமா என்ன? மனுஷன் பேட்டிகளில் ராமதாஸை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார். குறிப்பாக டாக்டர் பற்றி அவர் தட்டிவிட்டிருக்கும் சில செய்திகள் ஆர்.டி.எக்ஸ். ரகங்கள். அதாவது...”கட்சியை விட்டு நீக்கிய பின் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நான் அசரவில்லை, நான் குருவின் ரத்தமாச்சே.  

பா.ம.க. தலைமையின் வில்லங்கங்கள் எல்லாமே எனக்கு அத்துப்படி. பேராசிரியர் தீரன் ஆண்டிமடம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பா.ம.க.வை விமர்சனம் செய்தார். அப்போது தீரனை தொகுதிக்குள்ளேயே வரவிடாமல் தடுத்ததோடு, அவரை கொலை செய்ய வேண்டும்! என்று காடுவெட்டி குருவுக்கு கட்டளையும் இட்டார். ஆனால் தீரன் மேல் இருந்த நட்பினால் வெடிக்காத மாதிரி குண்டை தனது ஆட்கள் மூலம் வீச வைத்து அவரை தாக்குவது போல் எஸ்கேப் பண்ணிவிட்டார் குரு. இந்த விவகாரத்தை பலர் அறிவார்கள். 

அதேபோல் வாழப்பாடியாரின் தலையை வெட்டி வீசச்சொன்னார் ராமதாஸ். அவர் சொன்னதாலேயே குருவும் அப்படி அறிவித்தார். அரசியல் லாபத்துக்காக டாக்டர் ஏவிவிட்டதற்கெல்லாம் குரு பலிகடாவானார். கருணாநிதி, ஜெயலலிதா எல்லோரையும் டாக்டரின் உத்தரவின் பெயரிலேயே குரு கடுமையாக விமர்சனம் செய்தார். டாக்டர் ராமதாஸின் சகோதரர் ஒருவர் சாதி மாறி திருமணம் செய்தார். சொந்தத் தம்பியையே கொலை செய்ய கிருவை ஏவினார் டாக்டர். ‘நம்ம குடும்பத்துக்குள்ளேயே வேண்டாம்யா!’ன்னு தடுத்தவர் குருதான். 

அதேமாதிரி அறிவுச்செல்வன், மயிலாடுதுறை மூர்த்தி, சி.வி.சண்முகத்தின் உதவியாளர் அனந்தராமன் சகோதரர் ரகு ஆகியோரின் மரணங்களுக்கு பின்னணியில் இருக்கும் சதியும் எனக்கு தெரியும். அதனால் என்னை கொல்ல சதித்திட்டம் போடுகிறார்கள். நான் எந்த பூச்சாண்டிக்கும் பயப்படும் ஆளில்லை. என் உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு ராமதாஸும், அன்புமணியும்தா பொறுப்பு.” என்று வார்த்தைக்கு வார்த்தை பதறவிட்டிருக்கிறார்.

இந்நிலையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்போ “கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி தான் தோன்றித்தனமாக நடந்ததால் வி.ஜி.கே.மணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆத்திரத்தில் தலைமை மீது தாறுமாறான வதந்திகளையும், பொய்களையும் பழியாக சுமத்துகிறார். தேவைப்பட்டால் அவர் மீது போலீஸில் புகார் தரப்படும்.” என்கிறது. விடாது குரு!