தந்தை பெரியார் குறித்து தமிழக பாஜக ட்விட்டரில் அவதூறு பரப்பியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

பெரியாரின் நினைவு தினம் குறித்த தமிழக பாஜக, ‘’மணியம்மையின் தந்தை ஈ.வே.ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதிகொள்வோம்’’எனப் பதிவிட்டு இருந்தனர்.  இந்தப்பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக பாஜக இந்தப்பதிவை நீக்க வேண்டும் என ஆவேசமடைந்தனர். கடும் எதிர்ப்பால் அந்த அவதூறு ட்விட்டை தமிழக பாஜக அதிரடியாக நீக்கி உள்ளனர்.

 

இந்நிலையில் தமிழக பாஜகவின் இந்தப்பதிவு குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதாக் கட்சியும், அதன் ஐ.டி. பிரிவும்  டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது’’எனத் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகித்து வரும் நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.