தமிழக சட்டமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் அரசைக் கலைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது முதலே ஜெயலலிதாவின் உடல்நிலை காரணமாக அரசு நிர்வாகம் முடங்கிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

இதே போன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்தே  ஓபிஎஸ் தலைமையிலான அணியை சமாளிப்பதும், அந்த அணி இணைந்த பின்னர் தினகரன் அணியினரின் நெருக்கடிகளை சமாளிப்பதும் தான் முழுநேர பணியாக உள்ளது என தெரிவித்துள்ள ராமதாஸ்,  இதனால் அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கி ‘கோமா’ நிலையில் கிடக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் குறைகளை களைய வேண்டிய அரசு, பொறுப்பில்லாமல் ஊழல் செய்வதிலும், பதவிகளைக் காப்பாற்றி கொள்வதிலும் மட்டும் கவனம் செலுத்தி கொண்டிருப்பதை சகித்துக்கொள்ள முடியாத மக்கள் , இந்த மக்கள் விரோத அரசு போய் தொலையாதா? என மனதிற்குள் புழுங்குகின்றனர் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், தமிழகத்தில் நிலவும் அரசியல் அவலங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதில் கவர்னரும் அலட்சியம் காட்டுவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சனையில்  நடவடிக்கை எடுப்பதில் கவர்னர் தாமதம் செய்யும் ஒவ்வொரு மணி நேரமும் குதிரை பேரம் தீவிரமடையும் என்றும்  புதுப்புது கூத்துகள் அரங்கேறும். அரசியலின் தரம் தாழ்ந்து கொண்டே செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையை  உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க  ஆளுநர், ஆணையிட வேண்டும் என்று தெரிவித்துள்ள  ராமதாஸ், யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் தமிழக அரசைக் கலைப்பது தவறில்லை என்றும்ட தெரிவித்துள்ளார்.