அதிமுக கூட்டணியில் பாமக 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி தருமபுரி தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். தருமபுரியில் திமுகவை தாக்கி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுவரும் அன்புமணிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த காலத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் பற்றி அன்புமணி விமர்சித்த வீடியோக்களை திமுகவினர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அதற்கு பாமகவினர் பதிலடி கொடுத்தாலும், அந்த வீடியோக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அன்புமணி வாக்காளர்களிடம் கண்ணீர் விட்டு அழுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. ‘கட்சியினரை சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு அன்புமணி அழுதார்’ என பாமக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த வீடியோவை வைத்து திமுகவினர் அன்புமணியைக் கலாய்த்துவருகின்றனர்.

 
தற்போது அந்த வீடியோவை வன்னியர்களிடம் காட்டி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் பாமகவினர் ஈடுபட்டுவருவதாக சொல்லப்படுகிறது.  குறிப்பாகப் பெண்களிடம் வீடியோவை காட்டி அனுதாப ஓட்டு பெறும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அன்புமணியின் அழுகை வீடியோ குறித்து திமுகவினர் கூறும்போது, “அதிமுகவை கடுமையாக விமர்சித்து விட்டு அக்கட்சியுடன் கூட்டணி அமைத்ததை வன்னியர் சமூகத்தினர் விரும்பவில்லை. அந்தத் தோல்வி பயத்தில்தான் அன்புமணி அழுதார்' என விமர்சனம் செய்து வருகின்றனர்.