அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததை விரும்பாத முக்கிய நிர்வாகிகளான ராஜேஸ்வரி பிரியா ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் பாமகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்த நிலையில் மேலும் ஒரு மாநிலத் துணைத் தலைவர், இரு மாவட்டச் செயலாளர்கள் நேற்று பாமகவிலிருந்து விலகி  தினகரன் கட்சியில் இணைந்தனர்.

பாமக மாநிலத் துணைத் தலைவர் காங்கயம் கி.மாதவன், மாவட்டச் செயலாளர்கள் இரா.கணேஷ், கொங்கு கிஷோர் ஆகியோர் நேற்று சூலூர் இடைத் தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு வருகை தந்த டிடிவி தினகரனைச் சந்தித்து தங்களை இணைத்துக் கொண்டனர்.

இவர்களில் பாமக மாநிலத் துணைத் தலைவர் காங்கயம்  மாதவன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பாமகவில் 1989 முதல் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ராஜேஸ்வரி பிரியா, நடிகர் ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் பாமகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்துள்ள நிலையில் கொங்கு மண்டலத்தில் பாமகவில் கொஞ்சம் நஞ்சம் உள்ள முக்கிய நிர்வாகிகளும் அமமுகாவுக்கு பலம் சேர்ப்பது பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.