Asianet News TamilAsianet News Tamil

அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து கையிருப்பு இல்லை... பகீர் கிளப்பும் ராமதாஸ்...!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு இணையாக கருப்பு பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். 

PMK Leader Ramadoss urge TN Government to distribute black fungus medicine to all district
Author
Chennai, First Published May 25, 2021, 6:03 PM IST

கொரோனாவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் உள்ள 18க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தமிழகத்திலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு இணையாக கருப்பு பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு இணையாக கருப்புப் பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை நோயால் கணிசமானவர்கள்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. 

PMK Leader Ramadoss urge TN Government to distribute black fungus medicine to all district

தமிழகத்தின் அனைத்து கிராமங்களையும் கொரோனா வைரஸ் தாக்கி,  மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். அதனால் மக்களிடையே ஏற்பட்ட அச்சம் இன்னும் விலகாத நிலையில், அடுத்த சோதனையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் பலரும் இந்த உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தான்  கருப்புப் பூஞ்சைத் தாக்குதல் இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், எல்லா மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படாத நிலையில், அந்நோயை குணப்படுத்துவதற்கான மருந்தும் கிடைக்காதது நிலைமையை மோசமாக்கியுள்ளது.

சென்னையில் சில மருத்துவமனைகளைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் என எந்த மருத்துவமனையிலும் கருப்புப் பூஞ்சையை குணப்படுத்துவதற்கான ஆம்போடெரிசின்-பி (Amphotericin) ஊசி மருந்து இருப்பு இல்லை. கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இரு நாட்களாக எந்த மருத்துவமும் அளிக்கப்படவில்லை. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களின்  மருத்துவமனைகளிலும் இதே நிலை தான்.  

PMK Leader Ramadoss urge TN Government to distribute black fungus medicine to all district

திருச்சியில் தனியார்  மருத்துவமனை ஒன்றில் கருப்புப் பூஞ்சை நோய்க்காக மருத்துவம் பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும், மாவட்ட மருத்துவமனைகளுக்கும் உடனடியாக ஆம்போடெரிசின்&பி மருந்து அனுப்பி வைக்கப்படாவிட்டால், அடுத்த சில நாட்களில் அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழப்பதை தடுக்க முடியாது என்பதே எதார்த்தம்.

கருப்புப் பூஞ்சை நோய் எவரும் எதிர்பாராத நிலையில், திடீரென தாக்கத் தொடங்கியுள்ளது என்பதும், அதை மருத்துவர்களே  எதிர்பார்க்கவில்லை என்பதும் உண்மை தான்.  ஆனால், நிலைமை மோசமாகி  வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. கள நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்து கொண்டு கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களைக் காப்பாற்ற  தமிழக அரசு போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

PMK Leader Ramadoss urge TN Government to distribute black fungus medicine to all district

அதன்படி, எந்தெந்த வழிகளில் எல்லாம் ஆம்போடெரிசின்-பி மருந்தை கொள்முதல் செய்ய முடியுமோ, அந்தெந்த வழிகளில் எல்லாம் அந்த மருந்தை வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஆம்போடெரிசின்&பி மருந்தை போதுமான அளவுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios