விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவின் வெற்றிக்கு உதவியிருப்பது தெரிய வந்துள்ளது. 


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 1,13,745 வாக்குகளையும் திமுக வேட்பாளர் புகழேந்தி 68,828 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதிமுக வேட்பாளர் சுமார் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தல், 22 தொகுதி இடைத்தேர்தல், வேலூர் தேர்தல் என தொடர்ச்சியாக தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்திய திமுக, மிக மோசமான தோல்வியைப் பெற்றுள்ளது.


விக்கிரவாண்டி தொகுதியைப் பொறுத்தவரை அதிமுகவின் வெற்றிக்கு பாமக கூட்டணியும் முக்கிய காரணம் என்று நிச்சயம் சொல்லலாம். அந்தத் தொகுதியில் பாமகவுக்கு உள்ள கணிசமான வாக்கு வங்கி அதிமுகவின் வெற்றிக்கு உதவியிருக்கிறது. கடந்த 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ராதாமணி 6912 வாக்குகள் வித்தியாசத்தில்தான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் திமுகவின் ராதாமணி 63,757 வாக்குகளையும் அதிமுகவின் வேலு 56,845 வாக்குகளையும், பாமகவின் அன்புமணி 41,428 வாக்குகளையும் பெற்றனர்.


அண்மையில் நடந்த முடிந்த நாடளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் பாமக வேட்பாளர் ராவணனை 1,28,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டியில் ரவிக்குமார் 8 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற முடிந்தது. மற்ற தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னனியில் இருந்தது திமுக. அதிமுக - பாமக கூட்டணியால் அந்தத்தொகுதியில் ஓட்டு வித்தியாசம் குறைந்தது.


தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. 2016ல் பாமக தனியாகப் பெற்ற வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கு மொத்தமாக திரும்பியிருப்பதையும் பார்க்க முடிகிறது. அதிமுகவின் பிரமாண்ட வெற்றிக்கு பாமக உதவியிருப்பது உறுதியாகத் தெரிகிறது. இந்தத் தொகுதியில் திமுக தோல்வியடைந்திருந்தாலும் கடந்தத் தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. கடந்தத் தேர்தலைவிட சுமார் 5 ஆயிரம் வாக்குகளை திமுக கூடுதலாக பெற்றிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. இதேபோல 2011-ல் திமுக - பாமக ஒரே கூட்டணியில் இருந்தும் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. அப்போது அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பதையும் நினைவு கூரத்தக்கது.