தனது மனைவியின் தலைமுடியை கிண்டல் அடித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை,நடிகர் வில் ஸ்மித் விழா மேடையில் கன்னத்தில் அறைந்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது விழாவில் பரபரப்பு
94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு விருது விழாவை சிறப்பித்தனர். குறிப்பாக இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கிங் ரிச்சர்டு படத்தில் நடித்ததற்காக விருது வழங்கப்பட்டது. அதே நேரத்தில் விழா அரங்கில் வில் ஸ்மித் கோபமடைந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரின் முகத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகரும், ஆஸ்கர் விருது நிகழ்ச்சியும் தொகுப்பாளருமான கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியின் தலைமுடியை கிண்டல் அடித்து பேசினார் இதனால் கோபமடைந்த நடிகர் வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் திடீர் என ஒரு அறை அறைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வில் ஸ்மித்தின் மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளர்
இந்த நிகழ்வு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ஹாலிவுட் டால்பி திரையரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று காலை அகாடமி விருது (ஆஸ்கர் விருது) வழங்கும் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக கிரிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகர் மேடையேறினார். அப்போது நகைச்சுவை செய்வதாக நினைத்துக் கொண்டு, நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டின் தலைமுடி பிரச்சினையை கிண்டல் செய்தார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது. கிரிஸ்ராக்கின் நகைச்சுவைக்கு பெரிய வரவேற்பு இல்லை. வில்ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதால் அதை வாங்குவதற்காக வந்திருந்தார். கிரிஸ் ராக்கின் நகைச்சுவையைக் கேட்டு வில்ஸ்மித் ஆரம்பத்தில் சிறிது சிரித்தார். ஆனால், அருகிலிருந்த அவரது மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்து கொதித்துப் போனார்.

கன்னத்தில் பளார் விட்ட வில் ஸ்மித்
உடனடியாக மேடையில் ஏறிய வில் ஸ்மித் கிரிஸ்ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். அவை நாகரிகத்தையெல்லாம் விடுங்கள். வில் ஸ்மித்தின் செயல் மிகவும் சரியானது. கிரிஸ்ராக்கின் செயலுக்கு உடனடியாக சரியான தண்டனை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல.... ஜடாவை தாம் கிண்டல் செய்ததில் உள்நோக்கமில்லை என்று கிரிஸ்ராக் விளக்கமளித்த போது அதை ஸ்மித் ரசிக்கவில்லை. அப்போதும் கூட என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்குத் தகுதியில்லை என்று பொங்கியிருக்கிறார். அவர் உண்மையான கதாநாயகன். இந்த நிகழ்வு இரண்டு உண்மைகளை கூறியிருப்பதாக தெரிவித்துள்ளவர், 1. ஒருவரின் ஊனத்தை குறையை நகைச்சுவைக்கான கருப்பொருளாக்காதீர்கள். 2. மனைவியையும், அவரது உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும்! என பாமக நிறுவனர் ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
