தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் உணவு வழங்கி கவனித்து கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகிவரும் நிலையில், அதைப் பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் மூலம் தனது கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தொடர்வண்டி பெட்டிகளில் மாற்றம் செய்து சுமார் 7,000 படுக்கைகள் கொண்ட தனிமை வார்டுகளை தொடர்வண்டித் துறை உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. இது தனித்துவ முயற்சி. செயலளவில் அனைவரும் ஒன்றுபட்டு கொரோனாவை விரட்டுவோம்!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்னொரு ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் உணவு வழங்கி கவனித்து கொள்ளவேண்டும் என்று @CMOTamilNadu எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கடினமான நேரத்தில் கருணையான நடவடிக்கை. பிற மாநிலங்களும் இதை கடைபிடிக்கட்டும்.” என்று ராமதாஸ் பாராட்டியுள்ளார்.