எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென பாமக நிறுவனத் தலைவர்  ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு கோரியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.   தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்  தமிழக அரசுடன் இணைந்து ஆறு மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்  என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளதை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ் அதற்காக மத்திய அரசுக்கு நன்றிகளையும் பராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.  அத்துடன்  கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு அடையாளங்காட்டியுள்ள இடங்களில் கட்டுமான பணிகளை விரைந்து மேற்கொள்ள நிதி ஒதுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

கல்லூரிகள் கட்ட இன்னபிற அனுமதிகளை வழங்கி உடனே அதற்கான பணிகளை துவக்க ஆவணசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியாகி ஐந்து மாதங்கள் கடந்து விட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஆனால் இதுவரை மருத்துவமனை கட்டுவதற்கு  நிதி ஒதுக்கப் படவில்லை என்றும், காலம் தாழ்த்தாது எதிர்வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கட்டிடம் கட்ட முழுமையாக நீதி ஒதுக்கி  கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.