மழை பாதிப்பை கணக்கிட மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அனுப்புங்கள்.! பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
சூறைக்காற்றில் படகுகள் மோதி சேதமடைந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் மற்றும் வணிகம் தடைபட்டிருப்பதால் அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் உழவர்கள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையால் கடலூர் மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் இந்த மழையால் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீர்காழியில் 44 செ. மீ மழை பெய்துள்ளது. கொள்ளிடத்தில் 32 செ. மீ மழையும், அருகிலுள்ள கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நகரில் 31 செ. மீ மழையும் பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க..32 ஆண்டுகள் சிறை..இன்னும் திருப்தி இல்லையா.? நான் கணவருடன் செல்வேன் - உருக்கமாக பேசிய நளினி !
அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பெய்த மழையால் பயிர்களுக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இப்போது பெய்து வரும் மழை அனைத்து தரப்பினரையும் இழப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை - வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் பயிர்கள் அழுகிவிட்டன. சூறைக்காற்றில் படகுகள் மோதி சேதமடைந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் மற்றும் வணிகம் தடைபட்டிருப்பதால் அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதைக் கருத்தில் கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்புகளை கணக்கிடுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அனுப்ப வேண்டும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கும், பிற பிரிவினருக்கும் உடனடியாக போதிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்
இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !