Asianet News TamilAsianet News Tamil

மழை பெய்தாலும் உங்களுக்கு மனசு வராதா..? காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடகத்தை வறுத்தெடுத்த ராமதாஸ்!

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டால் கூட, இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டவாறு 40 டி.எம்.சி தண்ணீரைக் கொடுத்து விட முடியும். கேரளத்தின் வயநாடு பகுதியிலும், கர்நாடகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து தொடரும். அதனால், எதிர்காலத் தேவைகளுக்கு தண்ணீர் இருக்காதோ என கர்நாடக அரசு கவலைப்படத் தேவையில்லை.
 

PMK Founder Dr.Ramadoss slam Karnataka government on cauvery issue
Author
Chennai, First Published Jul 9, 2020, 9:15 PM IST

தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களில் தர வேண்டிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் இதுவரை முன்வராதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.PMK Founder Dr.Ramadoss slam Karnataka government on cauvery issue
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்திலும் கேரளத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை திறந்துவிட கர்நாடகம் இதுவரை முன்வராதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
அதன்பின் 28 நாட்களாகி விட்ட நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு இன்று காலை நிலவரப்படி 64.85 டி.எம்.சியிலிருந்து 43.04 டி.எம்.சியாகவும், நீர்மட்டம் 100.01 அடியிலிருந்து 81.08 அடியாகவும் குறைந்து விட்டது. அணையில் இப்போதுள்ள தண்ணீரைக் கொண்டு இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டும்தான், குறுவை சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியும். கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படாவிட்டால், குறுவை பருவத்தின் கடைசி கட்டத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படும்.

PMK Founder Dr.Ramadoss slam Karnataka government on cauvery issue
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி., ஜூலைக்கு 31.24 டி.எம்.சி என மொத்தம் 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஜூன் 10-ஆம் தேதி காணொலி வழியாக நடைபெற்றக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டது. அதன்பின் ஒரு மாதமாகியும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை. அதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. 
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 324 கனஅடியாக குறைந்து விட்டது. அதேநேரத்தில் அணையிலிருந்து வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப் படுவதால் வேகமாக குறைந்து வரும் அணையின் நீர்மட்டத்தை ஈடு செய்ய கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெற வேண்டியது அவசியமாகும். கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104.55 டி.எம்.சி ஆகும். அந்த 4 அணைகளின் மொத்த நீர் இருப்பு 50 டி.எம்.சியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 4 அணைகளுக்கும் சேர்த்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 40,000 கனஅடிக்கும் கூடுதலான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

PMK Founder Dr.Ramadoss slam Karnataka government on cauvery issue
இதேநிலை நீடித்தால் கபினி, ஹாரங்கி ஆகிய அணைகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது. மற்ற அணைகளும் விரைவில் நிரம்பக் கூடும். காவிரி அணைகளுக்கு இந்த அளவுக்கு தண்ணீர் வரும் போதிலும் கூட, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு மனம் வரவில்லை. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டால் கூட, இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டவாறு 40 டி.எம்.சி தண்ணீரைக் கொடுத்து விட முடியும். கேரளத்தின் வயநாடு பகுதியிலும், கர்நாடகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து தொடரும். அதனால், எதிர்காலத் தேவைகளுக்கு தண்ணீர் இருக்காதோ என கர்நாடக அரசு கவலைப்படத் தேவையில்லை.
அதேநேரத்தில் கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப் படவில்லை என்றால், குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படலாம். இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் முன்வர வேண்டும். இது குறித்து உரிய அமைப்புகள் மூலமாக கர்நாடகத்திற்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios