கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகள் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதிப் பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்; இறுதித் தேர்வை ரத்து செய்யும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல் ஆகும்.
டெல்லியில் பேட்டி அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே, “பள்ளிக்கல்வி மட்டும்தான் மாநிலப் பட்டியலில் உள்ளது. உயர்கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அதனால், பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்யும் விஷயத்தில் மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அவ்வாறு தேர்வுகளை ரத்து செய்தால், அதன்மீது பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கூறியுள்ளார். மத்திய மனிதவள அமைச்சகத்தின் இந்த எச்சரிக்கை, மாநில அரசுகள் மீதான தமது அதிகாரங்களை நிலை நாட்டும் ஆதிக்க முயற்சிதானே தவிர, மாணவர்களின் நலன் காக்கும் நடவடிக்கை அல்ல; மத்திய அரசு இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது ஆகும்.


உயர்கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால் பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்வதில் மாநிலங்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று கூறும் மத்திய அரசு, அதன் அறிவுரையை அதுவே கடைபிடிக்கவில்லை. உயர்கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதை மத்திய அரசு மதித்திருந்தால், பல்கலைக்கழகத் தேர்வுகளை அனைத்து மாநிலங்களும் செப்டம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு முன்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தியிருக்க வேண்டும்; ஆனால், அதுதொடர்பாக எந்த மாநில அரசுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை.
பொதுப்பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தாது. ஆனால், மத்திய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு, மாநிலங்களை எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாத அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற முயல்வது ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி தத்துவத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.


அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் முடிவெடுப்பதற்கு காரணமே பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் முனைவர் குஹாத் தலைமையிலான குழுவின் அறிக்கைதான். ஆனால், அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாதது ஏன்? அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மாநில அரசுகள் அறிந்து கொள்வதற்கு முன்பாகவே, அந்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் மாநில அரசுகளை மத்திய அரசு கட்டாயப்படுத்துவது சரியல்ல.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்து விட்டது. ஒவ்வொரு நாளும் 28 ஆயிரம் புதிய தொற்றுகள் ஏற்படுகின்றன. இனி வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கக் கூடும். கொரோனா பாதிப்பு அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக இல்லை. மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அதிக அளவில் பாதிக்கப்படாத மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்பது சாத்தியமற்றதாகும். தேர்வுகளை நடத்தலாமா, வேண்டாமா? ஒருவேளை நடத்துவதாக இருந்தால், எப்போது, எப்படி நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை மாநில அரசுகளிடமே விட்டு விட வேண்டும். அதுதான் மாணவர்களின் நலனை பாதுகாக்க உதவும்.
மராட்டியம், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, ஹரியானா, மேற்குவங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்கள் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. மத்திய அரசின் எச்சரிக்கைக்குப் பிறகு பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள் தவிர மீதமுள்ள 5 மாநிலங்களும் தேர்வுகளை நடத்த முடியாது என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளன. டெல்லி மாநில அரசும் தேர்வுகளை ரத்து செய்வதாக நேற்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தும் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தங்களுக்கே வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மேற்கண்ட 9 மாநிலங்களிலும் கொரோனா பரவல் காரணமாக தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நீடிப்பதையே அந்த மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் உணர்த்துகின்றன; இதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது மாநில அரசுகளின் ஆசை அல்ல. மாறாக சூழல்தான் இத்தகைய முடிவெடுக்க காரணமாக உள்ளது. இதை உணர்ந்து கொண்டு, இறுதிப் பருவத் தேர்வுகள் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.” என்று அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.