Asianet News Tamil

நாங்க சொன்னதை நீதிமன்றமும் சொல்லுது.. பாமக மதுவிலக்கு கொள்கை உன்னதமானது.. மதுவில்லா தமிழகம் காண ராமதாஸ் ஆவல்!

மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்று டாஸ்மாக் கடைகளின் பெயர் பலகைகளிலும், மது பாட்டில்களிலும் எழுதி வைத்து விட்டு மதுவை விற்பனை செய்வதைவிட பெரிய முரண்பாடு இருக்க முடியாது. மதுக்கடைகளை மூடினால் அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு இருக்க முடியாது. மதுக்கடைகள் மூடப்பட்டால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஏராளமான வழிகள் உள்ளன. பாமக அதற்கான மாற்று வருவாய் திட்டத்தை 12 ஆண்டுகளுக்கு முன்பே 2008-ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.

PMK founder Dr.Ramadoss on Tasmac case in chennai high court
Author
Chennai, First Published May 15, 2020, 7:51 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மதுவுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் பாமக எழுப்பிய அதே கேள்விகளை இன்று சென்னை உயர்நீதிமன்றமே எழுப்பியிருப்பதன் மூலம் பாமகவின் மதுவிலக்குக் கொள்கை எந்த அளவுக்கு சரியானது? எவ்வளவு உன்னதமானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழகத்தில் மதுவிற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்; ஆன்லைனில் மட்டும்தான் மது விற்பனை செய்ய வேண்டும்-கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிட்டார். அப்போது அவரிடம் தலைமை நீதிபதி சாஹி எழுப்பிய சில முக்கிய வினாக்கள்:
1. தேசத்தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, கோட்சேவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றுதான் நாட்டு மக்கள் அனைவரும் விரும்பினார்கள். ஆனால், ஒரே ஒரு வழக்கறிஞர் மட்டும்தான் கோட்சேவைக் காப்பாற்றுவதற்காக வாதாடினார். இப்போது ஒட்டுமொத்த தமிழகமும் மதுவிலக்கை வலியுறுத்தும்போது, மதுக்கடைகளை திறக்கக் கோரி ஆஜராகியுள்ள உங்களையும் கோட்சேவின் வழக்கறிஞரைப் போலவே தான் பார்க்கிறோம்.
2. ஒரு அரசின் முக்கிய நோக்கம் மக்கள் நலனா? அரசின் வருவாயா?
3. தமிழகத்தில் ஏறக்குறைய 50 ஆண்டுகாலம் மதுவிலக்கு நடைமுறையில் இருந்துள்ளது ராஜாஜி இரண்டு முறை சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்குப் பிறகும் மதுவிலக்கை அறிவித்தார். 1948ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மதுவிலக்கை கொண்டு வந்தார். இதையெல்லாம் நாங்கள் நன்றாக அறிந்துள்ளோம்.


4. மதுக்கடைகள் திறப்பதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். ஆனால் அதையும் தாண்டி பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்பதை தற்போதைய செய்திகள் உணர்த்துகின்றன. இதை நாங்களும் உணர்ந்திருக்கிறோம்.
5. சாதாரண சிறிய கிராமங்களில் 400, 500 பேர் மதுக்கடைகள் முன்பு குவிந்து நிற்கின்றனர். இதனால் பொது அமைதியோடு குடும்ப அமைதியும் பாதிக்கப்படும். அதை எப்படி அரசு தடுக்கப் போகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.
6. இங்கு வாதிட்ட வழக்கறிஞர்களில் பலரிடம் எதுவரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கேட்டோம். சிலர் ஊரடங்கு நீடிக்கும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்றார்கள்.... வேறு சிலர் கொரோனா ஒழிக்கப்படும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், அதற்கு பிறகும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டிய தேவை இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
7. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி ஆணையிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால், மதுவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு தவறுகிற பொழுது அரசியல் சாசனத்தின் காப்பாளராக இருக்கும் நீதிமன்றம் இதில் கண்டிப்பாக தலையிடும்.
8. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டி தத்துவமாக கருதப்படும் 47-வது பிரிவில் மருத்துவப் பயன்பாட்டுக்காகத் தவிர வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் மது பயன்படுத்தப்படக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் பொருள். இதை தனித்துப் பார்க்கக் கூடாது. மனிதர்களின் வாழும் உரிமையை வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவுடன் இணைத்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு இன்றைய விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சாஹி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
தலைமை நீதிபதி எழுப்பியுள்ள வினாக்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவை. தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் தலைமை நீதிபதி எந்த அளவுக்கு ஆர்வத்துடன் இருக்கிறார் என்பதை அவர் எழுப்பியுள்ள வினாக்கள் உணர்த்துகின்றன. இந்த வினாக்கள் அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் பாமகவாலும், என்னாலும் எழுப்பப்பட்டவைதான். இன்று அதே கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றமே எழுப்பியிருப்பதன் மூலம் பாமகவின் மதுவிலக்குக் கொள்கை எந்த அளவுக்கு சரியானது? எவ்வளவு உன்னதமானது? என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்று டாஸ்மாக் கடைகளின் பெயர் பலகைகளிலும், மது பாட்டில்களிலும் எழுதி வைத்து விட்டு மதுவை விற்பனை செய்வதைவிட பெரிய முரண்பாடு இருக்க முடியாது. மதுக்கடைகளை மூடினால் அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு இருக்க முடியாது. மதுக்கடைகள் மூடப்பட்டால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஏராளமான வழிகள் உள்ளன. பாமக அதற்கான மாற்று வருவாய் திட்டத்தை 12 ஆண்டுகளுக்கு முன்பே 2008-ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். மது இல்லாத தமிழகம்தான் மகிழ்ச்சியான தமிழகமாக இருக்கும். ஆகவே, மதுவை ஒழிக்க போராடுவோம்.
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். (குறள்: 925)
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும் என்பதுதான் இந்தக் குறளின் பொருளாகும். இதை அரசும், தனிமனிதர்களும் உணர்ந்து நடந்தால் தமிழகம் மகிழ்ச்சியான மாநிலமாக இருக்கும் என்பது உறுதி.” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios