Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சித் தேர்தல் நடத்தி என்ன பிரயோஜனம்..? டாக்டர் ராமதாஸுக்கு வந்த கோபம்..!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 

PMK Founder Dr.Ramadoss on local body issue
Author
Chennai, First Published Oct 6, 2020, 9:32 PM IST

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்து விட்ட நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. ஊரகப்பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளையும், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றத் தேவையான நிதியை ஒதுக்குவதில் தமிழக அரசு தேவையற்ற தாமதம் காட்டுவது ஏமாற்றமளிக்கிறது.PMK Founder Dr.Ramadoss on local body issue

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் தாமதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில்தான் நடத்தப் பட்டன. அதிலும் கூட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள், சென்னை தவிர்த்து 27 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மட்டும்தான் நடத்தப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும்கூட, அதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்காததுதான்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரிய அளவில் வரி விதிக்கும் அதிகாரம் இல்லை என்பதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதித்தேவையில் 70 விழுக்காட்டை மத்திய அரசும், 30 விழுக்காட்டை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மாதங்களில் எந்த அளவுக்கு நிதி கிடைத்திருக்க வேண்டுமோ? அதில் பத்தில் ஒரு பங்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதற்கான முயற்சியைக் கூட அரசுகள் மேற்கொள்ளவில்லை.
மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் மானியம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைத்துள்ளன என்றாலும்கூட, அந்த நிதியை கொரோனா பயன்பாட்டுக்காகவும், நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்காகவும் மாநில அரசு எடுத்துக் கொள்கிறது. இதனால் உள்ளாட்சிகளில் தவிர்க்கவே முடியாத அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட நிதி இல்லை. தேர்ந்தெடுக்கப் பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தர முடியாத மக்கள் பிரதிநிதிகளாகவே உள்ளனர். குடிநீர் வசதி, சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளைக் கூட செய்ய முடியாத நிலையில்தான் அவர்கள் உள்ளனர். பல கிராமங்களில் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இல்லாததால், மக்களின் கோபத்துக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆளாக நேரிடுகிறது.PMK Founder Dr.Ramadoss on local body issue
தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் மூன்று ஆண்டு தாமதமாக நடத்தப்பட்டன. அந்த மூன்று ஆண்டு காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படைத் தேவைகள் பெரிய அளவில் நிறைவேற்றப்படவில்லை. அதனால், மக்களின் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் அதிகரித்திருந்த நிலையில், அதற்கேற்றவாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதால் உள்ளாட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. சில கிராமங்களில் உள்ளாட்சித் தலைவர்கள் தங்களின் சொந்த செலவில் தவிர்க்க முடியாத சில பணிகளை செய்து வருகின்றனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஆனால், இதே நிலை இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீடிப்பதை தாங்க முடியும்?
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தியடிகள். முதுகெலும்பு வலுவாக இருந்தால்தான் தலைநிமிர்ந்து செயல்பட முடியும். அதை உணர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான நிதியை அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். முந்தைய ஆட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், புதிய அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என கிராமங்களில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதற்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன. கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பாதியளவு கூட நிறைவேற்றப்படாத நிலையில், கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சிறப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டதும் முறையல்ல.

PMK Founder Dr.Ramadoss on local body issue
கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட சிறப்பு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும். அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன் மூலம் கிராமங்களில் புதிய மறுமலர்ச்சியை அரசு ஏற்படுத்த வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios