அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் இருப்பது, அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்ய காரணமாக இருக்குமோ என ஐயப்படத் தோன்றுகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 21 நாட்கள் ஆகும் நிலையில், அச்சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மாணவர்கள் நலன் சார்ந்த விஷயத்தில் ஆளுநர் தேவையின்றி காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயில்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இந்தச் சட்டம் சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, அன்றே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதே நாளில் அச்சட்டம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


வழக்கமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஓரிரு நாட்களில் ஆளுநர் ஒப்புதல் அளித்து விடுவார்; அரிதிலும் அரிதாக ஏதேனும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் ஆகலாம். ஆனால், 3 வாரங்கள் முடிந்தும் ஒரு முக்கியமான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பது எவ்வகையிலும் நியாயமல்ல. அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் இருப்பதுதான், அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்வதற்குக் காரணமாக இருக்குமோ? என ஐயப்படத் தோன்றுகிறது. அவ்வாறு ஐயப்படுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. ஏனெனில், இப்படி ஒரு சட்டம் நடைமுறைக்கு வருவதை விரும்பவில்லை என்பது போன்றுதான் ஆளுநர் மாளிகையின் செயல்பாடுகள் தொடக்கம் முதலே அமைந்துள்ளன.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதலில் சட்டம் கொண்டு வரப்படவில்லை. கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதங்களிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், அதற்குள்ளாக சட்டம் நிறைவேற்ற முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கும்படி ஜூன் 15ம் தேதி அமைச்சரவை கூடி ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. அதையும் அரசு நேரடியாக செய்யவில்லை. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பொன். கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதுமட்டுமின்றி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடமும் சட்ட ஆலோசனை பெற்றது.


நடப்பாண்டிற்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அதன் முடிவுகள் அடுத்த ஒரு வாரத்தில், அதாவது வரும் 12-ம் தேதி வெளியிடப்படவுள்ளன. அதற்கு முன்பாகவோ, முடிவுகள் வெளியான ஒரு சில நாட்களிலோ மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிட வேண்டும். இத்தகைய சூழலில் ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்யக்கூடாது. மருத்துவக் கல்வி கனவாகிப் போன அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான சமூக நீதி வழங்க ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது. எனவே, தமிழக ஆளுநர் இனியும் தாமதிக்காமல், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிறைவேற துணை நிற்க வேண்டும்” என அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.