திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த சமூகம் வன்னியர் சமூகம் தான். வன்னிய மக்களை திமுக ஆதரவாளர்களாக மாற்றியதில் மிகமுக்கிய பங்கு வகித்தவர் ஏ.ஜி எனப்படும் ஏ. கோவிந்தசாமி அவர்கள் ஆகும். திமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றியவர் அவர்தான். திமுக தேர்தலில் பங்கேற்க வழிவகுத்தவர் அவர்தான். திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை கொடுத்தவரும் அவர்தான் என பாமகவின் பசுமைத்தாயகம் அருள் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;; ஏ.ஜி அவர்களுடன் ஒப்பிடவே முடியாத முரசொலி மாறனுக்கு நாடாளுமன்றத்தில் சிலைவைத்தது திமுக. ஆனால், திமுகவின் முதன்மை தலைவர்களுள் ஒருவராக இருந்த ஏ.ஜி அவர்களின் புகழை அவர் ஒரு வன்னியர் என்பதற்காகவே இருட்டடிப்பு செய்தது. அன்று வன்னியர் தலைவராக ஏ.ஜி அவர்கள் வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டத்தில், இன்று திமுகவின் மூன்று மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை.

ஏ.ஜி அவர்கள் முதன் முதலில் "ஏ. கோவிந்தசாமி நாயகர்" என்கிற பெயரில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்த பின்புதான் - திமுக தலைவருக்கு ஏ.ஜி அவர்களது நினைவு மீண்டும் வந்திருக்கிறது.

"வரலாற்று பின்னணி"

1888 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வன்னியகுல சத்திரிய மகா சங்கம், அச்சங்கத்தின் நிதி முதலீடு செய்யப்பட்ட வங்கி திவால் ஆனதால் நலிவடைந்தது. பின்னர் காங்கிரசு கட்சியால் வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்க்கும் விதமாக எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களை தலைவராகவும், ஏ. கோவிந்தசாமி அவர்களை செயலாளராகவும் கொண்டு வன்னிய குல சத்திரியர் சங்கம் இயங்கியது. 1949 மாவட்ட மன்றத் தேர்தலில் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் வெற்றிபெற்றார்.

சுதந்திர இந்தியாவிலும் காங்கிரசுக் கட்சி வன்னியர்களைப் புறக்கணித்தது. இதனால் வன்னியர்கள் வெகுண்டெழுந்தனர். 1952 தேர்தலில் வடார்க்காடு வன்னியர்கள் 'காமன்வீல் கட்சி' என்ற பெயரிலும், தென்னார்க்காடு வன்னியர்கள் 'தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி' என்ற பெயரிலும் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றனர். ஆனாலும், தேர்தல் வெற்றிக்கு பின்னர் வன்னியர் கட்சிகள் கலைக்கப்பட்டன. வன்னியர் தலைவர்கள் காங்கிரசில் இணைந்துவிட்டனர்.

"திமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி"

வன்னியர்களுக்கு துரோகமிழைத்த காங்கிரசுக்கு ஆதரவாக வன்னியர் கட்சிகள் மாறியதில் ஏ.ஜி அவர்களுக்கு உடன்பாடு இல்லை. அவருக்கு அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் ஆசை வார்த்தைகள் கூறிய போதும் அதனை ஏ.ஜி அவர்கள் ஏற்கவில்லை. திமுகவுக்கு ஆதரவாக செயல்பட அவர் முடிவு செய்தார்.

அந்த வகையில், 1952 - 1957 ஆம் ஆண்டுகளுக்கு இடையே சட்டமன்றத்தில் ஒரே திமுக சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர் ஏ.ஜி அவர்கள் தான். அதாவது, திமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி அவர்கள் தான்!

1953 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திமுக மும்முனைப் போராட்டம் நடத்திய போது, அக்கட்சியின் அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது திமுகவுக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுத்துக் கொண்டிருந்தவர் ஏ.ஜி.அவர்கள் ஆகும்.

திமுக தலைவர்கள் சிறை சென்றதால், அக்கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளராக ஏ. கோவிந்தசாமி அவர்களை நியமித்து அறிஞர் அண்ணா, இரா. நெடுஞ்செழியன், ஈ.வெ.கி. சம்பத், கே.ஏ.மதியழகன், என்.வி. நடராஜன் ஆகிய தலைவர்கள் 1.9.1953 அன்று கையொப்பமிட்டனர். (திமுகவை ஏ.ஜி அவர்களிடம் ஒப்படைத்து கையொப்பமிட்ட போது, திமுக தலைவர்கள் பட்டியலில் கருணாநிதி இல்லை) திமுக தலைவர்கள் சிறையில் இருந்த காலத்தில் திமுகவை கட்டுக்கோப்புடன் நடத்தியவர் ஏ.ஜி.

"திமுக தேர்தலில் போட்டியிட வழிவகுத்தவர் ஏ.ஜி"

வன்னியர் தலைவர்கள் காங்கிரசில் இணைந்ததால், ஏ.ஜி 1954 ஆம் ஆண்டில் 'உழவர் கட்சி' எனும் கட்சியைத் தோற்றுவித்தார். தலைவராக கோபால் கவுண்டர், பொதுச்செயலாளராக ஏ. கோவிந்தசாமி, பொருளாளராக திருக்குறள் வீ, முனுசாமி ஆகியோர் இருந்தனர்.

1954 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் ஏ.ஜி காணை காஞ்சனூர் தொகுதியில் உதயசூரியனை தேர்தல் சின்னமாக வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் ஏ.ஜி தலைமையில் வன்னியர்கள் திமுகவில் சேர்ந்தனர்.

'திமுக சட்டமன்ற நுழைவு மேற்கொள்வது ஆபத்தானது. ஆட்சிப் பொறுப்பின் பக்கம் கவனம் திரும்பினால் கழகத்தின் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்படும்' என்று நம்பிய அறிஞர் அண்ணா 'தேர்தலில் திமுக போட்டியிடாது' என்பதை தனது கொள்கையாக கொண்டிருந்தார். அண்ணாவின் இந்த முடிவை மாற்றியவர் ஏ. கோவிந்தசாமி அவர்கள் தான் என்பதை 1974 ஆம் ஆண்டு வெளியான திமுக தலைமைக் கழக வார ஏடு கூறுகிறது.

"உதயசூரியனை திமுகவுக்கு அளித்தவர் ஏ.ஜி"

திமுகவுக்கு தேர்தல் போட்டியிடலாம் என்று முடிவு செய்தபோதும், அக்கட்சிக்கு சின்னம் ஏதும் இல்லாததால், தான் உருவாக்கிய உதயசூரியன் சின்னத்தை அக்கட்சிக்கு அளித்தார் ஏ. கோவிந்தசாமி. திமுகவின் உதயசூரியன் சின்னம் உருவான வரலாறு இதுதான். திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த தொடங்கியதன் வரலாறும் இதுதான்.

திமுக முதன்முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 10 தொகுதிகள் வன்னியர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளாகும்.

அதன் பின்னர் 1962 தேர்தல் திமுக வெற்றி பெற்ற 50 இடங்களில் மிக அதிகமானவை வன்னியர்கள் வாழும் தொகுதிகள் ஆகும். இதனை Myron Weiner எனும் அரசியல் ஆய்வாளர் தனது Politics of Scarcity நூலில் "In the 1962 elections for the Madras Legislative Assembly, a large number of Vanniyakula Kshatriyas in North and South Arcot, Trichinopoly, Tanjore and Salem supported the DMK. It was in these districts that the DMK registered most of its gains" என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில் 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போதும் கூட - மிக அதிகமான இடங்களை வெற்றி கொண்டது வன்னியர்கள் ஆதரவுடன் தான்.

இவ்வாறு திமுகவின் வெற்றிக்கு மூலகாரணமாக இருந்த ஆ. கோவிந்தசாமி அவர்கள் 1969 ஆம் ஆண்டில் அமைச்சராக இருக்கும் போதே உயிர்நீத்தார்.

"ஏ.ஜி அவர்களை இருட்டடிப்பு செய்த திமுக"

அண்ணாவின் காலத்தில் கலைஞர் கருணாநிதிக்கு இணையான தலைவராக விளங்கினார் ஏ.ஜி. ஆனால், ஒரு வன்னியர் தலைவராக பெரும் செல்வாக்கு பெற்றவர் அவர் என்பதால், அதனை மறைக்க - விழுப்புரம் மாவட்டத்தில் ஏ.ஜி அவர்களின் குடும்பத்தினரை ஓரம் கட்டி, வன்னியர் அல்லாத பொன்முடியை முன்னிறுத்தியது திமுக. அன்று வன்னியர் தலைவராக ஏ.ஜி மீண்டும் மீண்டும் வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டத்தில், இன்று மூன்று திமுக மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை.

கலைஞர் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால், முரசொலி மாறனுக்கு புது தில்லி நாடாளுமன்றத்திலேயே சிலை வைத்த திமுகவினர், இத்தனை ஆண்டுகளாக ஏ.ஜி அவர்களின் புகழை கொண்டாட ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. இதற்கு ஏ.ஜி அவர்கள் ஒரு வன்னியர் தலைவர் என்பது மட்டுமே காரணமாகும்.

கடந்த 50 ஆண்டுகளாக திமுக மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை ஆட்சி செய்த காலத்தில் எல்லாம் திமுகவுக்கு ஏ.ஜி அவர்களின் நினைவு வரவில்லை. இப்போது திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் சூழலில் - ஏ.ஜி அவர்கள் முதன் முதலில் வெற்றிபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்த பின்னர்தான் மு.க. ஸ்டாலினுக்கு ஏ.ஜி அவர்களின் பெயர் ஞாபகத்துக்கு வந்திருக்கிறது என கூறியுள்ளார்.